விளையாட்டு

'ஆர்சிபி அணி அந்த 3 வீரர்களை மட்டும் நம்பியில்லை' - ஆகாஷ் சோப்ரா

'ஆர்சிபி அணி அந்த 3 வீரர்களை மட்டும் நம்பியில்லை' - ஆகாஷ் சோப்ரா

JustinDurai

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி டூ பிளெஸ்ஸிஸ், விராட் கோலி, மேக்ஸ்வெல் ஆகியோரை மட்டுமே நம்பியில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தெரிவித்தார்.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 2-வது தகுதி சுற்றுக்குள் நுழைந்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல். ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. ரஜத் படிதார் 54 பந்துகளில் 112 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனைத்தொடர்ந்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பெங்களூரு அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-வது தகுதி சுற்றுக்குள் நுழைந்தது. நாளை (மே 27) நடக்கும் இரண்டாவது தகுதி சுற்றில் ராஜஸ்தான் அணியுடன் ஆர்சிபி அணி மோதும். இதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

ஆர்சிபி அணியின் இந்த அபார வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா, ''எலிமினேட்டர் ஆட்டத்தில் கேப்டன் ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். விராட் கோலி 24 பந்துகளில் 25 ரன்கள் மட்டுமே எடுத்தார். மேக்ஸ்வெல் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினார். இருப்பினும் இந்த அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் பெங்களூரு அணியானது தங்களது மூன்று பெரிய நட்சத்திரங்களை மட்டுமே சார்ந்து இல்லை என்று மீண்டும் நிரூபித்துள்ளது. ஒவ்வொரு ஆட்டத்தின்போதும் புதிய ஹீரோக்களை கண்டுபிடிக்கும் திறனை இந்த சீசனிலும் அந்த அணியினர் தக்க வைத்துள்ளனர். அந்த வகையில் இந்த முறை ரஜத் படிதார் ஹீரோவாக உருவெடுத்துள்ளார். ஆர்சிபி பவுலர்கள் டெத் ஓவர்களில் சிறப்பாக பந்துவீசுகின்றனர்'' என்று கூறினார்.

இதையும் படிக்கலாம்: இதயங்களை வென்ற ரஜத் படிதார் - லக்னோவை வீழ்த்தி அசத்திய பெங்களூரு