தன்னுடைய குடும்பத்துடன் நேரம் செலவிட இருப்பதால், ஐபிஎல்லில் இருந்து கனத்த இதயத்துடன் விலகுவதாக குஜராத் அணியின் துவக்க வீரர் ஜேசன்ராய் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் 15-வது சீசன் போட்டிகள், வரும் மார்ச் 26-ம் தேதி முதல் மும்பையில் நடைபெற உள்ளது. இந்த ஐபிஎல்லின் இறுதிப் போட்டி, மே 29 -ம் தேதி நடைபெறுற உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய இரண்டு புதிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
“அனைவருக்கும் வணக்கம். மிக கனத்த இதயத்துடன் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக முடிவு எடுத்துள்ளேன். என்னை நம்பிய அணி நிர்வாகத்திற்கும், அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவிற்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். கடந்த 3 வருடமாக நமது உலகத்தில் நடந்த விஷயங்கள் எனக்கு இந்த முடிவை எடுக்க காரணமாக அமைந்தது.
இந்த தருணத்தில் எனது குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதே சரியானது எனத் தோன்றுகிறது. இந்த ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாட இருக்கும் ஒவ்வொரு போட்டியையும் பார்க்க ஆவலாக உள்ளேன். இந்த முறை குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் சீசனிலேயே கோப்பையை வெல்வதற்கு எனது ஆதரவு எப்போதும் இருக்கும். எனது முடிவை அனைவரும் மதிப்பீர்கள் என நம்புகிறேன். அனைவருக்கும் நன்றி” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
குகுஜராத் டைட்டன்ஸ் அணியின் சார்பாக சுப்மன் கில்லுடன் துவக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டநிலையில், ஜேசுன் ராய் விலகியிருப்பது, அந்த அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. இந்த ஐபிஎல் தொடரில் முதன்முதலாக ஹர்திக் பாண்டியா கேப்டனாக களமிறங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.