விளையாட்டு

வயது மோசடி சர்ச்சையில் சென்னை அணியின் இளம் வீரர் - ஐஏஎஸ் அதிகாரி கடிதத்தால் புதிய சிக்கல்

சங்கீதா

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்ட ராஜ்வா்தன் ஹங்கர்கேகர் வயது மோசடி செய்ததாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

சமீபத்தில், மேற்கு இந்திய தீவுகளில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை நடைபெற்றது. இதில் 5-வது முறையாக இந்திய அணி சாம்பியன் பெற்றது. இதனைத் தொடர்ந்து பெங்களூரு ஐடிசி கார்டினியாவில் நடைபெற்ற, 15-வது ஐபிஎல் சீசனுக்கான மெகா ஏலத்தில், உலகக் கோப்பையில் ஜொலித்த வீரர்களை, ஐபிஎல் அணிகள் போட்டிப்போட்டு எடுத்தனர். 

அந்தவகையில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வெல்ல முக்கிய பங்கு வகித்தவரான, ஆல் ரவுண்டர் ராஜ்வா்தன் ஹங்கர்கேகரை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 1.5 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. இந்நிலையில், மும்பையை சேர்ந்த ராஜ்வா்தன் ஹேங்கர்கேகர் வயது மோசடியில் ஈடுபட்டதாக, மகாராஷ்டிரா மாநில விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை ஆணையர் ஓம்பிரகாஷ் பகோரியா, பிசிசிஐக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்தக் கடிதத்துடன், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் வயது மோசடி செய்ததற்கான ஆதாரங்களை இணைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மராத்தி நாளேடான சாமனா வெளியிட்டுள்ள செய்தியில், ஹங்கர்கேகரின் உண்மையான வயது 21. டெர்னா பப்ளிக் பள்ளியின் மாணவரான ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், எட்டாம் வகுப்பில் மீண்டும் சேர்க்கப்படும்போது பிறந்த தேதியை ஜனவரி 10, 2001-க்கு என்பதற்கு பதிலாக, நவம்பர் 10, 2002 என்று மாற்றியுள்ளார்.

இந்த வயது குறைப்பால், அவரால் 19 வயதுக்குப்பட்டோருக்கான உலகக் கோப்பையில் விளையாட முடிந்தது. இதனை ஐஏஎஸ் அதிகாரி ஓம்பிரகாஷ் பகோரியா உறுதிப்படுத்தியதோடு அதற்கான ஆதாரங்களையும் தொகுத்து பிசிசிஐக்கு கடிதமாக எழுதி அனுப்பியுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ராஜ்வர்தன் ஹங்கர்கேகருக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

140 கி.மீ வேகத்தில் பந்துவீசும் திறன்கொண்ட ராஜ்வா்தன் ஹங்கர்கேகர், லோயர் ஆர்டரில் இறங்கி பவர் ஹிட்டராகவும் விளையாடுவார். உலகக் கோப்பையில் ஏழு போட்டிகளில் விளையாடி, 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதுதவிர, இரண்டு போட்டிகளில் பேட்டிங் செய்து, மொத்தமாக 52 ரன்களும் எடுத்துள்ளார். 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் அவரின் ஆட்டம் ஈர்க்கவே, அவரை ஏலத்தில் எடுக்க கடும் போட்டி நிலவியது. மும்பை அணியும் அவரை ஏலத்தில் எடுக்க முயற்சித்தது. எனினும், சென்னை அணி அவரை போட்டிக்கு மத்தியில் வாங்கியது.

தற்போது எழுந்துள்ள சர்ச்சையால் ராஜ்வா்தன் ஹங்கர்கேகர், சென்னை அணிக்காக விளையாடுவாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. ஒருவேளை அவர் மோசடி செய்தது நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டுகள் தடைவிதிக்கப்பட வாய்ப்புள்ளது. தற்போது சிக்கலில் மாட்டியுள்ள இளம் வீரர் ராஜ்வா்தன் ஹங்கர்கேகர், மோசடி செய்தாரா இல்லையா என்பது பிசிசிஐயின் விசாரணைக்கு பின் விரைவில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இதேபோன்ற குற்றச்சாட்டில், வயதை குறைத்துக் காட்டியதாக காஷ்மீரை சேர்ந்த கிரிக்கெட் வீரரும், 2019-ம் ஆண்டில் மும்பை அணிக்காக விளையாடிய வீரருமான ரஷீக் சலாம் தர் சிக்கினார். அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவர் 2 வருடம் கிரிக்கெட் விளையாட பிசிசிஐ தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.