விளையாட்டு

ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸர் யார் ? இன்று அறிவிக்கிறது பிசிசிஐ ?

ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸர் யார் ? இன்று அறிவிக்கிறது பிசிசிஐ ?

jagadeesh

நடப்பாண்டு ஐபிஎல் டி20 போட்டிகளுக்கான டைட்டில் ஸ்பான்ஸர் யார் என்பதை பிசிசிஐ இன்று அறிவிக்க இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் டாடா குழுமம் ஐபிஎல் ஸ்பான்ஸராக இருக்க வாய்ப்பிருப்பதாகவும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்நிலையில் நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரின் ஸ்பான்ஸரிலிருந்து விலகிக்கொள்வதாக சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ கடந்த சில நாள்களுக்கு முன்பாக தெரிவித்ததாக கூறப்பட்டது.

அதேசமயம் அடுத்த ஆண்டு மற்றும் 2022ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர்களின் ஸ்பான்ஸர்ஷிப்பினை தொடர விரும்புவதாகவும் விவோ கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடர் டைட்டில் ஸ்பான்ஸர்ஷிப் ஒப்பந்தத்தில் இருந்து பிசிசிஐ - விவோ நிறுவனமும் விலகிக்கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து டைட்டில் ஸ்பான்ஸர்களை பிசிசிஐ தேடுவதாக செய்திகள் வெளியானது.

ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸாரக இருப்பதற்கு பைஜூஸ், கொகோ கோலா, ஜியோ, ட்ரீம் 11, அமேசான், டாடா குழுமம், அதானி குழுமம் ஆகியவை போட்டிப் போட்டதாக கூறப்பட்டது. "இந்தியா டுடே" நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியின்படி ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸராக இருப்பதற்கு டாடா குழுமம் வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் டாடா குழுமம் போட்டிப்போட்ட மற்ற நிறுவனங்களை பின்னுக்கு தள்ளியிருப்பதாக கூறப்படுகிறது.

விவோ ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸராக இருக்க ரூ.440 கோடி கொடுத்து வந்தது. இப்போது போட்டிப்போடும் நிறுவனங்கள் ரூ.300 முதல் ரூ.400 கோடி வரை பிசிசிக்கு தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 13 ஆவது ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸர் செய்யும் நிறுவனம் எது என்பதை பிசிசிஐ இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.