விளையாட்டு

ஐபிஎல் 2020 : MI VS KKR : மேட்ச்  5: ஆட்டத்தை மாற்றிய டாப் 10 தருணங்கள் 

ஐபிஎல் 2020 : MI VS KKR : மேட்ச்  5: ஆட்டத்தை மாற்றிய டாப் 10 தருணங்கள் 

EllusamyKarthik

அபுதாபியில் நடைபெற்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிரான இந்த சீஸனின் 5-வது லீக் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் அணி
வெற்றி பெற்றுள்ளது.


இந்த வெற்றியின் மூலம் துபாய் மண்ணில் முதல் வெற்றியை ருசித்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.


இந்த போட்டியின் டாப் 10 தருணங்கள்…


1. கொல்கத்தா பவுலர்களை துவம்சம் செய்த ஹிட் மேன் ரோகித்


மும்பை அணியின் ஓப்பனர் டிகாக் ஆட்டத்தின் எட்டாவது பந்திலேயே ஷிவம் மாவியின் பந்தில் அவுட்டாகி வெளியேற, அதை கண்டும் காணாமல் தனது நேச்சுரல் கேமை ஆடினார் கேப்டன் ரோகித் ஷர்மா.

54 பந்துகளில் 80 ரன்களை எடுத்திருந்தார் ரோகித். இதில் 3 பவுண்டரிகளும், 6 சிக்ஸர்களும் அடங்கும். இந்த இன்னிங்ஸில் அவரது பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் 148.15.
அவரது அட்டகாசமான ஆட்டம் கொல்கத்தா வெற்றி பெற 196 என்ற பெரிய டார்கெட்டை செட் செய்ய உதவியது.
கொல்கத்தா அணிக்கு எதிராக ஐபிஎல் போட்டிகளில் ரோகித் அதிரடியாக விளையாடுவது வழக்கம். அதை இந்த ஆட்டத்திலும் நிரூபித்துள்ளார்.

2. பட்டையை கிளப்பிய சூர்யகுமார் யாதவ்


கேப்டன் ரோகித்துக்கு செமையாக கம்பெனி கொடுத்தார் மும்பையின் அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ். மும்பை மண்ணின் மைந்தர் என்ற அடிப்படையில் அணியில் சேர்க்கப்பட்டவர் சூர்யகுமார் யாதவ். ஆனால், என்னை நீங்கள் அப்படி பார்க்க வேண்டாமென சொல்லி ரன்களை அடித்து கலக்கியவர். கடந்த 2011 சீஸனிலிருந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் சூர்யகுமார் மும்பைக்காக வெற்றி ஓட்டங்களை எடுத்துள்ளார். 28 பந்துகளில் 47 ரன்களை குவித்திருந்தார் அவர்.


3. சூப்பர் பவுலர் ஷிவம் மாவி


கொல்கத்தாவின் வேகப்பந்து வீச்சாளர்களில் கேப்டன் தினேஷ் கார்த்திக்கிற்கு ஆறுதலாக அமைந்ததே இளம் பவுலர் ஷிவம் மாவியின் ஆட்டமாக தான் இருக்கும்.
நான்கு ஓவர்களில் பத்து டாட் பால்களை வீசியுள்ளார். அதோடு டிகாக் மற்றும் ரோகித் விக்கெட்டையும் வீழ்த்தி 32 ரன்களை விட்டு கொடுத்திருந்தார்.

4. ஹிட் அவுட்டாகி வெளியேறிய ஹர்திக் பாண்டியா


மும்பை பேட்டிங் இன்னிங்ஸில் ரன் ரேட்டில் லீட் கொடுத்தபோது ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 13 பந்துகளில் 18 ரன்கள் எடுத்த நிலையில் ஹிட் விக்கெட் முறையில் ஹர்திக் ரஸ்ஸலின் பந்தில் அவுட்டானார்.
வொய்ட் யாக்கராக வீசப்பட்ட அந்த பந்தை ஹர்திக் கிரீஸுக்கு பின்னால் சென்று ஆப் சைடில் ஆட முயன்ற போது பேட் ஸ்டெம்பில் பட்டு ஹிட் அவுட்டாகி வெளியேறினார்.
மைதானத்தை விட்டு வெளியேறி தன்னுடைய இடத்தில் அமரும் வரை ஹிட் அவுட் ஆனதை நினைத்து சிரித்துக் கொண்டே சென்றார்.


5. பவுலிங்கில் கலக்கி - பேட்டிங்கில் சொதப்பிய சுனில் நரைன்


கொல்கத்தா அணி உரிமையாளர்களின் நம்பிக்கையை வென்றவர் சுனில் நரைன். கடந்த சீசன்களில் அவரது ஆட்டம் அப்படியிருக்கும்.
எக்கானமியாக பந்து வீசுவது மற்றும் பவர்பிளேயில் ரன் குவிப்பதும் தான் நரைனுக்கு கொல்கத்தா எப்போதும் கொடுக்கின்ற அசைன்ட்மென்ட்.
மும்பையுடனான ஆட்டத்தில் நான்கு ஓவர்கள் வீசி வெறும் 22 ரன்களை மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தார். ஆனால் பேட்டிங்கில் படு சொதப்பு சொதப்பிய அவர் அதிரடி சரவெடியாக வெடித்து சிதறாமல் புஸ்வானமாய் போனார். பத்து பந்துகளை சந்தித்து வெறும் 9 ரன்களை மட்டுமே எடுத்து அவுட்டானார்.

6. ஏமாற்றிய இந்தியாவின் எதிர்காலம் சுப்மன் கில்


கடந்த சீசனில் வளர்ந்து வரும் இளம் நட்சத்திர வீரர் விருதை வென்ற சுப்மன் கில் துபாய் மைதானங்களில் அற்புதமாக விளையாடி அசத்துவார் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் கணித்திருந்தனர். அதையெல்லாம் தவிடுபொடியாக்கி 11 பந்துகளை சந்தித்து வெறும் 7 ரன்களை மட்டுமே எடுத்து வெளியேறினார். ஒப்பனர்கள் இருவரும் ஃபயரி ஸ்டார்ட்டை கொடுக்க தவறியதால் ஆரம்பத்திலேயே சறுக்கியது கொல்கத்தா.


7. ரன் சேர்க்க தவறிய கொல்கத்தா பேட்ஸ்மேன்கள்


இருபது ஓவர்களில் மொத்தம் 57 டாட் பால்களை ஆடியுள்ளனர் கொல்கத்தா பேட்ஸ்மேன்கள். பெரிய டார்கெட் சேஸ் செய்ய வேண்டுமென்ற அழுத்தத்தினால் நிதானமாக விக்கெட் இழப்பின்றி விளையாட வேண்டுமென்ற வியூகத்தினால் இது நடந்திருக்கலாம். கேப்டன் தினேஷ் கார்த்திக், பட்டின்சன் மற்றும் நித்திஷ் ராணாவை தவிர மற்றவர்கள் கிரீஸுக்கு வருவதும், பெவிலியனுக்கு திரும்புவதுமாக இருந்தனர்.


8. பும்ரா ஓவரில் கிடைத்த ஃலைப்பை வீணடித்த மோர்கன்


ஆட்டத்தின் 13வது ஓவரை பும்ரா வீசினார். அந்த ஓவரின் ஐந்தாவது பந்தை எதிர்கொண்டார் இயான் மோர்கன். மிடில் ஸ்டெம்பை நோக்கி 139.6 கிலோ மீட்டர் வேகத்தில் வீசப்பட்ட அந்த பந்து ஸ்டெம்பில் பட்டும் பெயில்ஸ் விழாததால் அவுட்டாகாமல் தப்பினார். இருப்பினும் அந்த வாய்ப்பை அடுத்த சில பந்துகளிலேயே வீணடித்தார் மோர்கன். 16 ரன்களை எடுத்து அவுட்டானார்.

9. பொல்லார்ட் பந்தில் வீழ்ந்த ராணா


இடது கை சுழற் பந்து வீச்சாளர் குர்னால் பாண்டியவை கொல்கத்தா பேட்ஸ்மேன்களை டேமேஜ் செய்துவிடக் கூடாது என்பதற்காக பொல்லார்டை பார்ட் டைமாக பந்து வீச சொல்லி கேப்டன் ரோகித் பணித்திருப்பார்.பொல்லார்டும் மூன்று ஓவர்களை வீசி நிலையாக வென்று கொண்டிருந்த நிதிஷ் ராணாவை வீழ்த்தியிருப்பார்..

10. பும்ரா பாலில் போல்டான ரஸ்ஸல்


கொல்கத்தா அணியின் கொம்பன் என பரவலாக எல்லோராலும் அறியப்படுபவர் ரஸ்ஸல். தோல்வியின் விளிம்பில் சிக்கி கிடக்கின்ற அணியை தனது அபாரமான பேட்டிங்கின் மூலம் வெற்றி பாதைக்கு ஏற்கெனவே அழைத்துச் சென்றுள்ளார்.
ஆனால் மும்பையுடனான இந்த லீக் ஆட்டத்தில் 196 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய போது வெறும் 11 ரன்கள் மட்டுமே எடுத்து பும்ரா வீசிய மிடில் அண்ட் யார்கள் லெந்த் பந்தை சிக்ஸ் அடிக்க முயன்று அதை மிஸ் செய்ததால் க்ளீன் போல்டாகி வெளியேறினார். அவர் மீது கொல்கத்தா அணி வைத்த எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிந்தது.


பேட்டிங், பவுலிங், பீல்டிங் என ஆல் ரவுண்ட் பர்பாமன்ஸ் கொடுத்து நடப்பு ஐபிஎல் சாம்பியன் அணி என்பதை நிரூபித்துள்ளது மும்பை.