விளையாட்டு

‘சி.எஸ்.கே’ தோனியா ? ‘ஆர்.சி.பி’ கோலியா ? - வெற்றி யாருக்கு..?

‘சி.எஸ்.கே’ தோனியா ? ‘ஆர்.சி.பி’ கோலியா ? - வெற்றி யாருக்கு..?

webteam

‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ மற்றும் ‘ராயல் சேலஞ்சர்ஸ்’ பெங்களூரு அணிகள் இடையேயான முதல் ஐபிஎல் போட்டி நாளை மறுநாள் நடைபெறுகிறது.

ஐபிஎல் போட்டியை இந்தியாவின் மிகப் பெரிய கிரிக்கெட் திருவிழா என்று கூறலாம். பள்ளிப் பொதுத்தேர்வுகள் முடிவதற்கும் ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கும் சரியாக இருக்கும். அதேபோன்று இந்த ஆண்டும் பள்ளித்தேர்வுகள் முடிய, ஐபிஎல் தொடங்குகிறது. இதற்கிடையே நாடாளுமன்றத் தேர்தல் என ஒன்று பெருமளவில் பேசப்படுகிறது. ஆனால் ஐபிஎல் ரசிகர்களின் கவனம் கொஞ்சம் கூட கிரிக்கெட்டிலிருந்து சிதறாது என்று கூறுகின்றனர் கிரிக்கெட் வல்லுநர்கள்..

2019ஆம் ஆண்டு ஐபிஎல் வரும் சனிக்கிழமை தொடங்குகிறது. முதல் போட்டியில் ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ மற்றும் ‘ராயல் சேலஞ்சர்ஸ்’ பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியை சென்னையா? பெங்களூரா? என்று ஐபிஎல் ரசிகர்கள் பார்க்கமால், தோனியா ? கோலியா ? என்றே பார்க்கிறார்கள். இதை நமக்கு சமூக வலைத்தளங்கள் பளிச்சென்று காட்டுகிறது. தோனிக்கு நிகரான கேப்டன் இல்லை என்று சென்னை ரசிகர்களும், கோலிக்கு நிகரான பேட்ஸ்மேன் உலகத்திலேயே இல்லை என்று பெங்களூரு ரசிகர்களும் வரிந்து கட்டிக்கொண்டு நிற்கின்றனர்.

இந்த மோதல் சமூக வலைத்தள போராக உருவெடுத்திருக்கும் நிலையில் தான், முதல் ஐபிஎல் போட்டியில் நாளை மறுநாள் இரு அணிகளும் மோதுகின்றன. இதற்காக இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை அணி கடந்த முறையோடு சேர்த்து 3 முறை கோப்பையை வென்றுள்ளது. ஆனால் பெங்களூரு அணி இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. 

இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. எனவே இந்தப் போட்டியில் சென்னை வீரர்களுக்கு ரசிகர்களின் உற்சாக கரகோசம் சற்றும் குறையாது. இதனால் ரசிகர்களின் கோஷங்களையும் எதிர்த்து பெங்களூர் அணி விளையாட வேண்டும். அதுமட்டுமின்றி கடைசியாக சென்னையுடன் மோதிய 6 போட்டிகளில் ஒன்றில் கூட பெங்களூரு அணி வெற்றி பெற்றதில்லை. இதுவரை சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி மொத்தம் 23 போட்டிகளில் மோதியுள்ளன. இதில், 15 போட்டிகளில் சி.எஸ்.கேவும் 7 போட்டிகளில் ஆர்.சி.பி-யும் வெற்றி பெற்றுள்ளன. சென்னையில் நடைபெற்ற 7 போட்டிகளில் 6 முறை சென்னை சூப்பர் கிங்ஸ் தான் வெற்றி வாகை சூடியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி சென்னை சேப்பாக்கம் மைதானம் பேட்டிங் பிட்ச் ஆக உள்ளது. எனவே முதலில் பேட்டிங் செய்யும் அணி குறைந்தபட்சம் 180 ரன்களாவது எடுக்க வேண்டும். இல்லையென்றால் இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணி வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம். சென்னை அணியில் சனிக்கிழமை அன்று தென் ஆப்பிரிக்க வீரர் லுங்கி நிகிடி சிறு காயம் காரணமாக விளையாடமாட்டார். இருப்பினும் அந்த அணியின் கேப்டன் டூ பிளசிஸ் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தஹிர் ஆகியோர் விளையாடுவார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் சுழற்பந்து எடுபடும் எனக்கூறப்படுகிறது.

சென்னையில் தோனி, வாட்ஸன், ரெய்னா, டு பிளஸிஸ் பேட்டிங்கும், பெங்களூருவில் விராட் கோலி, டி வில்லியர்ஸ், ஹெட்மயர், ஸ்டொயினிஸ் ஆகியோரின் பேட்டிங் சிறப்பாக இருக்கலாம் எனப்படுகிறது. இந்த முக்கிய வீரர்கள் எந்த அணியில் சொதப்புகிறார்களோ அந்த அணி முதலில் பேட்டிங் செய்தால் வெற்றி எதிரணிக்கு சாதகமாகும். அதேசமயம் சுழற்பந்திலும், சென்னையில் ஜடேஜா, இம்ரான் தஹிர், ஹர்பஜன் உள்ளிட்டோர் எதிரணிக்கு நெருக்கடி கொடுப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. பெங்களூரிலும் சாஹல் சுழற்பந்து சென்னையை மிரட்டும் எனப்படுகிறது. இருப்பினும் இதுவரை நடந்து முடிந்து போட்டிகளின் புள்ளி விவரங்களும், தற்போதைய அணியின் நிலையையும் கருத்தில் கொண்டு பார்க்கும் நிலையில், சென்னைக்கு வெற்றி வாய்ப்பு சற்று அதிகமாக இருப்பதாக கணிக்கப்படுகிறது.