விளையாட்டு

பதட்டமில்லாமல் சிக்ஸர் விளாசல் - விஜய்சங்கரின் ‘தனி ஸ்டைல்’ !

பதட்டமில்லாமல் சிக்ஸர் விளாசல் - விஜய்சங்கரின் ‘தனி ஸ்டைல்’ !

webteam

ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விஜய் சங்கர் உருவாகி வருகிறார். 

இந்திய அணிக்கு புதிய நம்பிக்கை நட்சத்திரமாக தமிழக வீரர் விஜய் சங்கர் கிடைத்துள்ளார். தன்னுடைய துல்லியமான பேட்டிங் மூலம் இந்திய அணியில் தனக்கான இடத்தினை அவர் உறுதி செய்து வருகிறார். குறைவான போட்டிகளிலே அவர் விளையாடி இருந்தாலும், ஒரு நேர்த்தியான பேட்ஸ்மேனுக்கு உரிய முறையில் விளையாடுகிறார்.

ஆஸ்திரேலியா தொடரில் கேப்டன் விராட் கோலியுடன் இணைந்து இக்கட்டான நேரத்தில் அவர் விளையாடிய விதம் அனைவரையும் கவர்ந்தது. பாண்ட்யா இல்லாத நேரத்தில் அவரது இடத்தை பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அவர் கச்சிதமாக நிரப்பி இருந்தார். பந்துவீச்சில் அவருக்கு குறைவான வாய்ப்பே கொடுக்கப்பட்டது. 

இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரிலும் விஜய் சங்கர் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். குறிப்பாக, நடுவரிசையில் களமிறங்கும் அவர் சிரமமில்லாமல் சிக்ஸர் விளாசுகிறார். இது ஐதராபாத் அணிக்கும் பலமாக உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் 24 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். அதேபோல், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 15 பந்துகளில் 35 ரன்கள் விளாசினார்.

மும்பை அணியில் பின் களத்தில் இறங்கும் பாண்ட்யா அடிக்கும் ரன் எப்படி அந்த அணி வலுவான ஸ்கோரை எட்ட உதவுகிறதோ, அதேபோல்தான் ஐதாராபாத் அணியில் விஜய் சங்கர் அடிக்கும் ரன்களும். அதிக நேரம் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில், விஜய் சங்கர் அரைசதம் அடித்து தன்னை மேலும் நிரூபிக்க வேண்டும்.

இந்திய அணியில் பாண்ட்யாவுக்கு மாற்று வீரராக விஜய் சங்கர் உருவாகிறார் என்று தொடக்கத்தில் பேசப்பட்டது. ஆனால், தற்போது அந்த நிலை மாறி வருகிறது. ஐபிஎல் போட்டிகளில் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடும் பட்சத்தில், பாண்ட்யாவுக்கு மாற்று வீரராக அல்லாமல் தனக்கென தனி இடத்தை அவரால் பிடிக்க முடியும். பந்துவீச்சில் அவர் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.