விளையாட்டு

ஐபிஎல் போட்டிகளின் களநிலவரம் என்ன? - ஸ்கோர் ரீவைண்ட்

ஐபிஎல் போட்டிகளின் களநிலவரம் என்ன? - ஸ்கோர் ரீவைண்ட்

webteam

இந்தியாவின் முக்கிய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் போட்டி நாளை சென்னையில் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணியும் மோதவுள்ளனர். இதனால் இந்த இரு அணி ரசிகர்கள் இடையே பலத்த ஏதிர்பார்ப்புகள் நிலவுகின்றன. 

இந்நிலையில் இதுவரை ஐபிஎல் போட்டிகளில் எடுக்கப்பட்ட முதல் 3 அதிகமான அணி ஸ்கோர்கள் மற்றும் குறைவான அணி ஸ்கோர்கள் என்ன? ஒரு சின்ன ரீவைண்ட் போடலாமா?

அதிகமான அணி ஸ்கோர்கள்:

1. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ- 263/5 vs புனே வாரியர்ஸ் (2013)

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணி 6வது ஐபிஎல் தொடரில் பெங்களூரூவில் நடைபெற்ற போட்டியில் புனே வாரியர்ஸ் அணியின் பந்துவீச்சை அடித்து துவம்சம் செய்தது. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய கிறிஸ் கெய்ல் 17 சிக்சர்கள் மற்றும் 13 பவுண்டரிகள் உதவியுடன் 66 பந்துகளில் 175 ரன்கள் விளாசினார். இதன் மூலம் கெய்ல், மெக்கலம் முதல் ஐபிஎல் போட்டியில் எடுத்திருந்த 158 ரன்கள் என்ற சாதனையை முறியடித்தார். இதனையடுத்து விளையாடிய புனே வாரியர்ஸ் அணி 133 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணி 130 ரன்களில் வென்று சாதனை படைத்தது.

2. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ- 248/3 vs குஜராத் லையன்ஸ் (2016)

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை ராயல் சேலஞ்சர்ஸ் அணி கோப்பை வெல்லவில்லை என்றாலும் அந்த அணி பல சாதனைகளை புரிந்துள்ளது. அந்த வகையில் பெங்களூரூ அணிதான் ஐபிஎல் வரலாற்றில் முதலாவது மற்றும் இரண்டாவது அதிக ஸ்கோரை பதிவு செய்துள்ளது. இந்தப் போட்டியில் ஏ.பி. டிவிலியர்ஸ் மற்றும் விராட் கோலியின் அபாரமான ஆட்டத்தால் பெங்களூரூ அணி இந்தப் பிரம்மாண்டமான ஸ்கோரை எட்டியது. ஏ.பி. டிவிலியர்ஸ் 12 சிக்சர்கள் மற்றும் 10 பவுண்டரிகளுடன் 59 பந்தில் 129 ரன்கள் எடுத்து அசத்தினார். மறுமுனையில் விராட் கோலி தன் பங்கிற்கு 8 சிக்சர்கள் மற்றும் 5 பவுண்டரிகள் உதவியுடன் 55 பந்துகளில் 109 ரன்கள் குவித்தார்.

3. சென்னை சூப்பர் கிங்ஸ்- 246/5 vs ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணி (2010)

சென்னை சூப்பர்கிங்ஸ் அணி சேப்பாகத்தில் நடைபெற்ற போட்டியில் முரளி விஜய்யின் அதிரடியால் ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை பந்தாடியது. இந்தப் போட்டியில் முரளி விஜய் ராஜஸ்தான் அணியின் ஷேன் வார்னேவின் சுழற்பந்துவீச்சையை நேர்த்தியாக எதிர்கொண்டு அதிரடி காட்டினார். இவர் 56 பந்துகளில் 127 ரன்கள் குவித்து சென்னை அணியின் போட்டியை காணவந்த ரசிகர்களுக்குப் பெரிய விருந்தளித்தார்.

குறைந்த அணி ஸ்கோர்கள்:

1. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ- 49 vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (2017)

ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஐபிஎல் வரலாற்றில் அதிகமான ஸ்கோரையும் குறைவான ஸ்கோரையும் தன் வசம்தான் வைத்துள்ளது. அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரூ அணி 9.4 ஓவர்களில் வெறும் 49 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நாதன் கவுல்டர்நைல், கிறிஸ் ஓக்ஸ் மற்றும் டி க்ராண்ட்ஹோம் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இந்தப் போட்டியில் பெங்களூரூ சார்பில் கேதார் ஜாதவ் அதிகபட்சமாக 9 ரன்கள் எடுத்திருந்தார்.

2. ராஜஸ்தான் ராய்ல்ஸ்- 58 vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ (2009)

இந்தப் போட்டியில் அனில் கும்ப்ளேவின் சுழற்பந்து வீச்சில் ராஜஸ்தான் அணி விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது. சிறப்பாக பந்துவீசிய கும்ப்ளே 5 ரன்கள் விட்டு கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ராஜஸ்தான் 134 ரன்கள் என்ற இலக்கை விரட்டி விளையாடி 15.1 ஓவர்களில் 58 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியடைந்தது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக பதான் மற்றும் ஜடேஜா இரட்டை இலக்க ரன்களான 11 ரன்களை எட்டியிருந்தனர்.

3. டெல்லி கேபிடல்ஸ்- 66 vs மும்பை இந்தியன்ஸ் (2017)

மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயித்த 213 ரன்கள் இலக்கை துரத்தி விளையாடிய டெல்லி கேபிடல்ஸ் அணி சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்தது. இந்தப் போட்டியில் ஹர்பஜன் சிங் மற்றும் கரண் சர்மா தலா மூன்று விக்கெட்டுகள் சாய்த்தனர். இவர்களின் அபாரமான சுழற்பந்துவீச்சால் டெல்லி அணி 13.4 ஓவர்களில் 66 ரன்களுக்கு சுருண்டது. டெல்லி அணியில் அதிகபட்சமாக கருண் நாயர் 21 ரன்கள் எடுத்தார்.  மற்ற வீரர்கள் சோபிக்காததால் டெல்லி அணி படுதோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் அடைந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி அந்தாண்டு ஐபிஎல் தொடரின் நாக் ஆவுட் சுற்றிற்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.