பெங்களூருவுக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச தீர்மானித்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன்களுக்கு மட்டுமே எடுத்தது. அந்த அணியில் பர்திவ் படேல் 53 மற்றும் டிம் சவுதி 36 ரன்கள் எடுத்தனர். சென்னை அணியின் சார்பில் ஜடேஜா 3 மற்றும் ஹர்பஜன் சிங் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை எதிர்த்து பேட்டிங் செய்த சென்னை அணி, ஆரம்பம் முதலே நிதானமாக ரன்களை சேர்த்து வந்தது. தொடக்க வீரர் வாட்சன் 11 ரன்களில் வெளியேற, அம்பதி ராயுடு 32 ரன்களில் அவுட் ஆனார். சின்ன தல என ரசிகர்களால் அழைக்கப்படும் ரெய்னா 25 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த துருவ் 8 ரன்களில் ஆட்டழந்தார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்ததால், பந்துகளை விட ரன்கள் அதிகம் என்ற நிலைக்கு சென்னை வந்தது.
இருப்பினும் 4 விக்கெட்டுகளுக்குப் பிறகு ஜோடி சேர்ந்த கேப்டன் தோனி மற்றும் ப்ராவோ அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இலக்கை நெருங்க, நெருங்க தோனி தனது அதிரடியை ஆரம்பித்தார். இறுதி நேரத்தில் ரசிகர்களை கொண்டாட வைத்த அவர், எளிமையான வெற்றியையும் சென்னை அணிக்கு பெற்றுக்கொடுத்தார். அவரது அதிரடியில் 128 என்ற இலக்கை 18 ஓவர்களிலேயே சென்னை அணி அடைந்தது. தோனி 23 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்தார்.