விளையாட்டு

கோப்பையை வென்றது மஞ்சள் ஆர்மி: சென்னையில் இன்று கொண்டாட்டம்!

கோப்பையை வென்றது மஞ்சள் ஆர்மி: சென்னையில் இன்று கொண்டாட்டம்!

webteam

மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அதை சென்னையில் இன்று கொண்டாடுகிறது.

ஐபிஎல் இறுதிப் போட்டியில் சாம்பியன் படத்தை மூன்றாவது முறையாக வென்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. மும்பை வான்கடே மைதானத்தில் ஐதராபாத் அணியுடன் நேற்று மோதிய சிஎஸ்கே, டாஸ் வென்று பீல்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி வீரர்கள் முதலில் தடுமாறி பிறகு விளாசியதால், அந்த அணி, 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. கேப்டன் வில்லியம்சன் 36 பந்துகளில் 47 ரன்களும் யூசுப் பதான் 25 பந்துகளில் 45 ரன்களும், பிராத்வெயிட் 11 பந்துகளில் 21 ரன்களும் விளாசினர். சென்னைத் தரப்பில் நிகிடி, தாகூர், கரண் ஷர்மா, பிராவோ, ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.


179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய சென்னை அணி தொடக்கத்தில் ரன் குவிக்கத் திணறியது. டு பிளிசிஸ் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். பிறகு ஷேன் வாட்சனுடன், சுரேஷ் ரெய்னா இணைந்த பின் போட்டியில் புயல் கிளம்பியது. வாட்சன் 33 பந்துகளில் அரைசதம் அடித்தார். சந்தீப் சர்மா வீசிய 13 ஆவது ஓவரில் அடுத்தடுத்து மூன்று சிக்சர்கள் விளாசி ரசிகர்களை குஷிப்படுத்தினார். ரெய்னா 32 ரன்களில் வெளியேறினார். சிக்சர் மழை பொழிந்த வாட்சன் 51 பந்துகளில் சதமடித்தார். இந்த ஐபில் தொடரில் இது அவரது இரண்டாவது சதம். சென்னை அணி 18.3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. வாட்சன் 117 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

மூன்றாவது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை வென்றுள்ளதால் இதன் கொண்டாட்டம் மும்பையில் நடக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், சென்னையில் நடத்துகிறது சிஎஸ்கே நிர்வாகம். 

இதுபற்றி தோனி கூறும்போது, கோப்பையை வென்றதன் வெற்றியை இங்கு (மும்பை)  கொண்டாடும் திட்டமில்லை. நாளை (இன்று) சென் னை செல்கிறோம். அங்கு ரசிகர்கள், அணிக்கு நெருங்கியவர்கள் உட்பட சிலரை சந்திக்கிறோம். நட்சத்திர ஓட்டல் ஒன்றில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அங்கு சிறப்பாகக் கொண்டாடுகிறோம்’ என்றார்.