விளையாட்டு

தென்னாப்பிரிக்காவை பந்தாடிய இந்திய மகளிர் அணி

rajakannan

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றுள்ளது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் கிம்பெர்லி நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று கிம்பெர்லி நகரில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அதிரடியாக விளையாடி 3 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் குவித்தது. தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா 129 பந்துகளில் 135 ரன்கள் குவித்து அசத்தினார். வேத கிருஷ்ணமூர்த்தி 33 பந்துகளில் 51 ரன்களும், ஹெச்.கவுர் 69 பந்துகளில் 55 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

303 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணியில், தொடக்க வீராங்கை லீ மட்டும் நிலைத்து நின்று ஆட மற்றவர்கள் வருவதும் அவுட் ஆவதும் போவதுமாக இருந்தனர். எல்லா வீரர்களும் ஒற்றை இலக்க ரன்னிலே ஆட்டமிழந்தனர். 73(75) ரன்னில் லீ ஆட்டமிழக்க அடுத்த சில ஓவர்களிலே ஆட்டம் முடிவுக்கு வந்தது. தென்னாப்பிரிக்கா அணி 30.5 ஓவரில் 124 ரன்னில் சுருண்டது. இந்திய அணி தரப்பில் பூனம் யாதவ் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். இந்திய அணி 178 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த தொடரையும் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.