இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிக்க அணி 118 ரன்களில் ஆல்அவுட் ஆனது.
தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. டர்பனில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றிபெற்றது. இந்நிலையில் 2வது ஒரு நாள் போட்டி செஞ்சூரியனில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராத் கோலி முதலில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார்.
இதையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் தொடக்க வீரர்கள் அம்லா(23) மற்றும் டி காக்(23) ஆகியோர் மட்டும் சற்று நேரம் நிலைத்து ஆடி அவுட் ஆனார்கள். இவர்கள் தவிர ஜெபி டுமினி 25 மற்றும் காயா சோண்டோ 25 ரன்கள் எடுத்தனர். மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால் 32.2 ஓவர்களில் 118 ரன்கள் மட்டும் எடுத்த தென்னாப்பிரிக்கா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் சுழற்பந்துவீச்சாளர் சஹால் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மற்றொரு சுழற்பந்துவீச்சாளரான குல்தீப் 3 விக்கெட்டுகளை எடுத்தார். இதையடுத்து 119 என்ற வெற்றி இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது. தற்போது இந்தியா ஸ்கோர் 26-1. சிக்கர் தவான் (8), கோலி (0) என களத்தில் உள்ளனர்.