இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை போட்டியை ஒரே நேரத்தில் 32 லட்சம் பேர் இணையதளத்தில் பார்த்துள்ளனர்.
ஆசியக் கோப்பை 2018 தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்று வரும் சூப்பர் 4 சுற்றின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தேர்வு பெற்றதால், ரோகித் ஷர்மா, புவனேஷ் குமார், பும்ரா, ஷிகர் தவான் மற்றும் சாஹல் ஆகியோருக்கு இன்றைய போட்டியில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று தோனி கேப்டனாக அணியை வழி நடத்துகிறார்.
இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் முகமத் 124 (116) ரன்களை குவித்து அணியை சரிவில் இருந்து மீட்டார். 6 விக்கெட்டிற்குப் பிறகு வந்த நபி 64 (56) ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த நஜிபுல்லா 20 (20), மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு அந்த அணி 252 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 253 என்ற இலக்கை எதிர்த்து இந்தியா விளையாடவுள்ளது. இந்தப் போட்டி ஸ்டார் சேனல் குரூப்பின் அதிகாரப்பூர்வ செயலியான ஹாட் ஸ்டாரில் நேரடி ஒளிபரப்பட்டது. இதனை ஒரே நேரத்தில் 32 லட்சம் பேர் பார்த்தனர்.