விளையாட்டு

"அப்ரிதியை ஒரு பொருட்டாக யாரும் மதிப்பதில்லை" - கோலியின் பயிற்சியாளர் சாடல் !

"அப்ரிதியை ஒரு பொருட்டாக யாரும் மதிப்பதில்லை" - கோலியின் பயிற்சியாளர் சாடல் !

jagadeesh

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களான ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங் உள்ளிட்ட பலரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிதியின் அறக்கட்டளைக்கு நிதியுதவி செய்தனர். இந்நிலையில் பாகிஸ்தானில் பொது இடத்தில் அப்ரிதி காஷ்மீர் தொடர்பாகவும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்த வீடியோ வெளியாகி வைரலானது. இதனையடுத்து இந்திய வீரர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

 இது குறித்து சிஎஸ்கே அணியின் சின்ன தல சுரேஷ் ரெய்னா தன்னுடைய ட்விட்டர் பதிவில் "என்ன மாதிரியான ஆட்கள் இவர்கள் எனத் தெரியவில்லை. நீங்கள் முதலில் தோல்வியடைந்த நாட்டுக்கு உருப்படியாக உங்கள் ஏதாவது செய்யுங்கள், காஷ்மீரை விட்டுவிடுங்கள். நான் ஒரு பெருமை மிகு காஷ்மீரி, அது எப்போதும் இந்தியாவின் தவிர்க்க முடியாத பகுதிதான். ஜெய் ஹிந்த்" எனப் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் விராட் கோலியின் பயிற்சியாளர் ராஜ்குமார் ஷர்மா ரிபப்ளிக் தொலைக்காட்சியில் பேசும்போது " அப்ரிதி விளையாடிக்கொண்டு இருந்த காலகட்டத்திலேயே இந்திய அணியினர் அவரை சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை. என்ன இருந்தாலும் அப்ரிதி இப்படிப் பேசியிருக்கக் கூடாது. இப்போது அதற்கான எதிர்வினையை அவர் அனுபவித்து வருகிறார். இந்திய அணியினர் நாட்டுப்பற்று மிக்கவர்கள். அவர்களிடமிருந்து அப்ரிதி கற்றுக்கொள்ள வேண்டும். விராட் கோலி அப்ரிதியை பற்றி எப்போதும் பேசியதில்லை பேசும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவரும் இல்லை" என்றார்.

மேலும் தொடர்ந்த அவர் "அப்ரிதி அரசியலுக்கு வர வேண்டுமென நினைக்கிறார். இந்தியாவை யாரெல்லாம் தவறாகப் பேசுகிறார்களோ அவர்கள் பாகிஸ்தானில் பிரபலமாவார்கள், புகழப்படுவார்கள். அதுதான் அவர்களின் மனநிலை. இப்போது அப்ரிதி அதை நோக்கித்தான் செல்கிறார். இறுதியில் அரசியலில் நுழைவார்" என்றார் ராஜ்குமார் ஷர்மா.