ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனைகள் மூன்று பேர் கலந்து கொள்ளவுள்ளனர். இதில் பதக்க நம்பிக்கையாக பரிமளிக்கிறார் வினேஷ் போகத்.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்ற முந்தைய ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கத்தை வென்று ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு புதிய வரலாறை எழுதினார் சாக்ஷி மலிக். ப்ரி ஸ்டைல் 58 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற அவர், வெண்கலப்பதக்கத்தை வென்று தேசத்தை கெளரவப்படுத்தினார். இந்த முறை 3 வீராங்கனைகளுடன் மல்யுத்த களத்திற்கு செல்கிறது. 53 கிலோ எடைப்பிரிவில் வினேஷ் போகத், 57 கிலோ எடைப்பிரிவில் அன்சு மலிக், 62 கிலோ எடைப்பிரிவில் சோனம் மலிக் மல்லுக்கட்ட உள்ளனர்.
ஹரியானாவைச் சேர்ந்த 26 வயதான வினேஷ் போகத், மல்யுத்த குடும்பத்தை சேர்ந்தவர். இவர்களின் சகோதரிகளாக கீதா போகத், பபிதா குமாரி ஆகியோரும் சர்வதேச மல்யுத்த நாயகிகளே. இவர்களது குடும்பத்தின் கதையே ஹிந்தியில் தங்கல் என்ற திரைப்படமாக வெளியானது. காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகள், ஆசிய சாம்பியன்ஷிப் ஆகியவற்றில் தங்கப்பதக்கத்தை அள்ளியுள்ள வினேஷ் போகத், முந்தைய ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
காலிறுதி வரை முன்னேறிய அவர், காலிறுதியில் சீன வீராங்கனை சன் யனானை எதிர்த்து விளையாடினார். அந்தப்போட்டியில் சன் யனானின் கிடுக்கிப்பிடியால் வினேஷ் போகத்துக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து காயத்துடனும், பதக்கத்தை வெல்ல முடியாமல் போனதே என கண்ணீருடனும் களத்திலிருந்து வெளியேறினார் வினேஷ் போகத். ரியோ ஒலிம்பிக்கில் ஏற்பட்ட காயம் இப்போது சரியாகி இருக்கலாம். டோக்யோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றால் தான் வினேஷின் மனக்காயம் ஆறக் கூடும்.
19 வயதாகும் அன்சு மலிக் மகளிர் மல்யுத்தத்தில் மற்றொரு பதக்க எதிர்பார்ப்பாக உள்ளார். இவரும் ஹரியானாவைச் சேர்ந்தவரே. கடந்தாண்டு டெல்லியில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப்பதக்கத்தை வென்றிருக்கிறார் இவர். இதனைத் தொடர்ந்து செர்பியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் வெள்ளிப்பதக்கத்தை வென்றார். ஹரியானவை சேர்ந்த மற்றொரு வீராங்கனையான சோனம் மலிக் 62 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்கிறார். 19 வயது வீராங்கனையான சோனம் மலிக்கும் ஒலிம்பிக்கில் சாதிக்கும் உத்வேகத்துடன் பயிற்சி களத்தில் இருக்கிறார்.