விளையாட்டு

கெத்தாக விளையாடிய இந்திய மகளிர்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் டிராவில் முடிந்தது

கெத்தாக விளையாடிய இந்திய மகளிர்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் டிராவில் முடிந்தது

jagadeesh

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாலோ ஆன் பெற்று இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய மகளிர் அணி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அபாரமாக விளையாடி போட்டியை டிரா செய்தனர்.

இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி பிரிஸ்டலில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பெண்கள் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதனையடுத்து 9 விக்கெட் இழப்புக்கு 396 ரன்கள் எடுத்தபோது தன்னுடைய முதல் இன்னிங்ஸை டிக்ளர் செய்தது. இதனையடுத்து இந்தியா தன்னுடைய இன்னிங்ஸை தொடங்கியது. இதில் தொடக்க வீராங்கனைகளான ஷபாலி வர்மாவும், ஸ்மிரிதி மந்தனாவும் சிறப்பாக விளையாடினர்.

இதில் ஸ்மிரிதி மந்தனா 78 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஷபாலி வர்மா 96 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து இந்திய வீராங்கனைகளின் விக்கெட்டுகளை சீராக சரிந்தது. இதனால் இந்திய மகளிர் அணி 231 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் கிரிக்கெட் விதிப்படி "பாலோ ஆன்" ஆன இந்திய அணி தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது. இதில் ஸ்மிரிதி மந்தனா 8 ரன்களில் அவுட்டானார். ஆனால் ஷபாலி வர்மா தொடர்ந்து விளையாடி அரை சதம் கடந்தார்.

இந்நிலையில் மைதானத்தில் மழை குறுக்கிட்டதால் போட்டி பாதிக்கப்பட்டு, மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதனால் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் எடுத்தது. ஷபாலி வர்மா 56 ரன்களுடன் களத்தில் இருந்தார். ஒருநாள் ஆட்டமே மிஞ்சியிருந்த நிலையில் இந்திய அணி இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைவிட 82 ரன்கள் பின் தங்கியிருந்த நிலையில் கடைசி நாளான நேற்று களமிறங்கியது. இதில் ஷபாலி வர்மா 63 ரன்னில் ஆட்டமிழந்தார். தீப்தி ஷர்மா 54 ரன்னும், பூனம் ராவத் 39 ரன்னும் எடுத்தனர்.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஸ்நே ரானா பொறுப்புடன் ஆடி 80 ரன்னுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு டனியா பாட்டியா துணை நின்று 44 ரன்னுடன் களத்தில் உள்ளார். இந்த ஜோடி 104 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தபோது 4 ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்திய அணியினர் சிறப்பாக விளையாடி டெஸ்ட் போட்டியை டிரா செய்தனர். இரு இன்னிங்ஸிலும் சிறப்பாக விளையாடி அரைசதமடித்த ஷபாலி வர்மாவுக்கு ஆட்டநாயகி விருது வழங்கப்பட்டது.