இந்திய அணியில் நீண்ட நாட்களாக இருக்கும் முக்கியமான பிரச்னைகளில் ஒன்று மிடில் ஆர்டர் சிக்கல். இதற்கு முன்பு தோனி தலைமையிலான அணியில் யுவராஜ் சிங், ரெய்னா போன்ற வீரர்கள் மிடில் ஆர்டரில் அசத்தினார்கள். தோனியும் மிடில் ஆர்டரில் களமிறங்கி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வார். ஆனால், சமீப காலமாக மிடில் ஆர்டரில் பல நேரங்களில் வீரர்கள் சொதப்பி வருகிறார்கள்.
தொடக்க வீரர்களாக ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் அசத்தலாக விளையாடி வருகிறார்கள். அவர்களை தொடர்ந்து மூன்றாம் நிலை வீரராக கேப்டன் விராட் கோலி களமிறங்கி அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அதிரடி காட்டுகிறார். அதனால், முதல் மூன்று வீரர்களுக்கு சிக்கல் இல்லை. அதன் பிறகுதான் யாரை எந்த இடத்தில் களமிறக்குவது என்பதில் ஒரு தெளிவு இல்லாமல் இருக்கிறது. மிடில் ஆர்டரில் வீரர்கள் யாரும் நிரந்தரமாக பர்ஃபார்ம் செய்யவில்லை.
நான்கு, ஐந்து, ஆறு ஆகிய மூன்று இடங்களில் களமிறங்கும் வீரர்கள் வலுவாக இருந்தால்தான் ஒரு அணி சிறந்ததாக இருக்க முடியும். ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பண்ட் போன்றவர்களை அந்த இடங்களில் நிரப்ப இந்திய அணி முயற்சித்து வருகிறது. அந்த வரிசையில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மன் இடத்துக்கு கொண்டு வரப்பட்டவர்தான் ஸ்ரேயாஸ் ஐயர்.
இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு நியூஸிலாந்து மண்ணில் மிகப்பெரிய தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது இந்திய அணி. 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளது. இதில், இன்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் 204 என்ற வெற்றி இலக்கை அசத்தலாக சேஸ் செய்து இந்திய அணி வெற்றியை பதிவு செய்திருக்கிறது.
தொடக்க வீரராக களமிறங்கிய கே.எல்.ராகுல் 56 (27), மூன்றாவது வீரராக விளையாடிய விராட் கோலி 45 (32) ரன்கள் எடுத்தாலும், மிடில் ஆர்டரில் களமிறங்கிய ஸ்ரேயாஸ்தான் வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமைந்தார். விராட் கோலி ஆட்டமிழந்த போது இந்திய அணி 121 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. சிறப்பாக விளையாடி வந்த ராகுலும், கோலியும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். கிட்டதட்ட 90 ரன்கள் மேற்கொண்டு எடுக்க வேண்டியிருந்தது. ஆனால், எவ்வித பதட்டமும் இல்லாமல் ஸ்ரேயாஸ் விளையாடினார்.
பந்துகளை வீணடிக்காமல் சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசி ரன்களை சேர்த்தார். 29 பந்துகளை மட்டுமே சந்தித்து 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் குவித்து இறுதிவரை களத்தில் இருந்தார். இவரது அதிரடியால் இந்திய அணி 19 ஓவரிலேயே 204 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இமாலய சிக்ஸர் விளாசி வெற்றி ரன்னை அடித்தார் ஸ்ரேயாஸ்.
உலகக் கோப்பை தொடரிலேயே இந்திய அணியின் மிடில் ஆர்டர் பிரச்னை தெளிவாக தெரிந்தது. மிடில் ஆர்டரில் கடைசியாக களமிறங்கும் ஆல்ரவுண்டரான ஜடேஜாதான் தற்போது அதிக அளவில் நம்பிக்கை அளித்து வருகிறார். ஜடேஜாவை அடுத்து தற்போது நம்பிக்கை நட்சத்திரமாக உருவாகி வருபவர் ஸ்ரேயாஸ் ஐயர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்றாலும், மூன்றாவது போட்டியில் சரியாக விளையாடி 35 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து வெற்றி பெற வைத்தார்.
ஸ்ரேயாஸ் மீது அதிக நம்பிக்கை எழுவதற்கு முக்கியமான காரணம் அவரது பேட்டிங் முறை. இவரது பேட்டிங் முறை பல நேரங்களில் விராட் கோலியை ஒத்திருக்கிறது. இவரது ஷாட்கள் மிகவும் நேர்த்தியாக உள்ளது. அதனால், இந்திய அணியில் பிற்காலத்தில் ஸ்ரேயாஸ் முக்கியமான இடத்தை பிடிப்பார் என தெரிகிறது.