துப்பாக்கி சுடுதல் web
விளையாட்டு

மீண்டும் ஆதிக்கம் செலுத்துவார்களா இந்திய ஷூட்டர்கள்? பாரிஸில் எத்தனை பதக்கங்களுக்கு வாய்ப்பு?

2024 ஒலிம்பிக் தொடர் பாரிஸில் ஜூலை 26 முதல் தொடங்குகிறது.

Viyan

2024 ஒலிம்பிக் தொடர் பாரிஸில் ஜூலை 26 முதல் தொடங்குகிறது. ஆகஸ்ட் 11 வரை நடக்கும் இந்தத் தொடருக்கு 127 வீரர், வீராங்கனைகள் அடங்கிய இந்திய குழு சென்றிருக்கிறது. டோக்கியோவில் 7 பதக்கங்கள் வென்ற இந்தியா, இம்முறை அதைவிட அதிக பதக்கங்கள் வெல்லவேண்டும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அதைப் பூர்த்தி செய்யவேண்டும் என்றால் இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர்கள் தங்களின் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தவேண்டும். அவர்கள் மீது வழக்கம்போல் இம்முறையும் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

துப்பாக்கி சுடுதலில் இந்தியா!

2004 ஏதன்ஸ் ஒலிம்பிக்ஸ் முதல் லண்டன் வரை தொடர்ந்து 3 தொடர்களில் துப்பாக்கி சுடுதலில் குறைந்தது ஒரு பதக்கமாவது இந்தியாவுக்குக் கிடைத்தது.

ஏதன்ஸில் ராஜ்யதவர்தன் சிங் ராத்தோர் வெள்ளிப் பதக்கம் வென்றார். பீஜிங் ஒலிம்பிக்கில் இந்தியாவின் முதல் தனி நபர் தங்கப் பதக்கத்தை வென்று வரலாறு படைத்தார் அபினவ் பிந்த்ரா. லண்டனில் விஜய் குமார் (வெள்ளி), ககன் நரங் (வெண்கலம்) வென்று அசத்தினார்கள்.

அதுமட்டுமல்லாமல் ஆசிய விளையாட்டுப் போட்டி, காமன்வெல்த் என மற்ற தொடர்களில் தொடர்ந்து கோலோச்சி வந்தார்கள். அதனால் துப்பாக்கி சுடுதல் வீரர்கள் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்படத் தொடங்கியது. ஆனால் ரியோவிலும் டோக்கியோவிலும் அவர்களால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இந்தியாவால் அந்த இரண்டு ஒலிம்பிக் தொடரில் துப்பாக்கி சுடுதல் மூலம் ஒரு பதக்கம் கூட வெல்ல முடியவில்லை.

குறிப்பாக டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய வீரர்களிடம் எதிர்பார்ப்பு அளவுக்கு அதிகமாக இருந்தது. மனு பாக்கர், இளவேனில் வாளறிவன், சௌரப் சௌத்ரி என உலகக் கோப்பை, காமன்வெல்த், ஆசியன் கேம்ஸ் போன்ற தொடர்களில் தங்கங்கள் வென்று குவித்த இளம் பட்டாளம் ஒலிம்பிக்க்கின் நெருக்கடியை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. இந்நிலையில் இப்போது மீண்டும் தங்கள் முத்திரியைப் பதிக்க இந்திய ஷூட்டர்கள் பாரிஸில் தயாராக இருக்கிறார்கள். கடந்த 2 ஒலிம்பிக் தொடர்களிலும் தவறியது இம்முறை நிச்சயம் நிறைவேறும் என்று பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

மனு பாக்கர்

டோக்கியோவில் துப்பாக்கியில் ஏற்பட்ட பிரச்சனையால் தடுமாறிய மனு பாக்கர், இம்முறை தன் அனுபவத்தைப் பயன்படுத்தி நிச்சயம் வெற்றி வாகை சூடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 10 மீட்டர் ஏர் பிஸ்டல், 25 மீட்டர் பிஸ்டல், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி என 3 பிரிவுகளில் பங்கேற்கும் அவர், ஒன்றிலாவது பதக்கம் வெல்வார்.

அதேபோல் தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வாளறிவன் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் தனி நபர் பிரிவிலும், கலப்பு அணி பிரிவிலும் பங்கேற்கிறார். டோக்கியோவுக்குப் பிறகு பெரிய வெற்றிகள் பெறாத அவர், சமீபத்தில் நடந்த ரியோ ஒலிம்பிக் தொடரில் தங்கம் வென்றிருக்கிறார். அதனால் அவரும் இரண்டில் ஒன்றிலாவது பதக்கத்தை நெருங்குவார்.

இவர்களை விடவும் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருப்பது சிஃப்ட் கௌர் சம்ரா மீது. 50 மீட்டர் ரைஃபிள் 3 பொசிஷன் பிரிவில் ஆசியன் கேம்ஸில் தங்கம் வென்ற இவர், உலக சாதனையையும் தன் வசம் வைத்திருக்கிறார். மிகவும் கூலான அவரால், ஒலிம்பிக்கின் நெருக்கடியை நன்கு சமாளிக்க முடியும் என்று அனைவரும் நம்புகிறார்கள். அதனால் அவரால் நிச்சயம் போடியம் ஏற முடியும்.

ஆண்களைப் பொறுத்தவரை 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் சந்தீப் சிங் அல்லது அர்ஜூன் பபுதா இருவரில் ஒருவர் ஏதேனும் மாயங்கள் நிகழ்த்தலாம். அதேசமயம், 50 மீட்டர் ரைஃபிள் 3 பொசிஷன் பிரிவில் ஐஷ்வரி பிரதாப் சிங் தோமர் நிச்சயம் பதக்கம் வெல்லக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அர்ஜூன் பபுதா

இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர்கள் தங்கள் நெருக்கடியை மட்டும் சமாளித்தால் 5 பதக்கங்கள் கூட வெல்ல முடியும். குறைந்தபட்சம் இம்முறை 2 பதக்கங்களாவது வந்தே தீரவேண்டும் என்பதுதான் வல்லுநர்களின் கணிப்பாக இருக்கிறது.