விளையாட்டு

தங்கம் வென்ற தமிழச்சி : இளவேனில் வாலறிவன் பிறந்தநாள்

தங்கம் வென்ற தமிழச்சி : இளவேனில் வாலறிவன் பிறந்தநாள்

EllusamyKarthik

‘வாள் வீச்சுக்கு வேலு நாச்சியார் என்றால் துப்பாக்கிச் சுடுதலுக்கு நான் தான்’ என கெத்தாக சொல்பவர் இந்தியாவின் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவன்

இந்தியாவுக்காக தங்கப்பதக்கம் சுட்டு வரும் அவருக்கு இன்று பிறந்த நாள்.

இதே நாளில் 1999-இல் கடலூரில் பிறந்த இளவேனில் வாலறிவனுக்கு சிறு வயதிலிருந்தே விளையாட்டின் மீது ஆர்வம் அதிகம். தொடக்கத்தில் தடகள போட்டிகளில் சாதிக்க வேண்டுமென்ற முயற்சியை மேற்கொண்டு வந்த சூழலில் அவரது பெற்றோருக்கு பணி வாய்ப்பு குஜராத்தின் அஹமதாபாத்தில் கிடைக்க குடும்பத்தோடு அங்கு செட்டிலாகி உள்ளனர். 

மொழி, கலாச்சாரம், நண்பர்கள் என அனைத்தும் மாறிய போதும் தன் மனதில் இருந்த விளையாட்டை மட்டும் மறவாதிருந்தார். பள்ளி அளவிலான போட்டிகள் மற்றும் வட்ட அளவிலான போட்டிகள் என தடகளத்தில் மெடல்களை குவித்துள்ளார். 

இராணுவத்தில் பணி செய்யும் இளவேனிலின் அண்ணன் வீட்டுக்கு வரும் போதெல்லாம் தங்கையோடு பிஸ்டல், ரைபிள், கன் என துப்பாக்கிகளை குறித்து டிஸ்கஸ் செய்துள்ளார். அதுவே நாளடைவில் இளவேனிலுக்கு பேஷனாக மாற அதுவரை ஜேம்ஸ் பாண்டின் பொம்மை துப்பாக்கிகளை கைகளில் பிடித்து விளையாடி வந்தவருக்கு நிஜ துப்பாக்கியை தூக்க வேண்டுமென்ற ஆசை வந்துள்ளது. தனது விருப்பத்தை பெற்றோரிடம் சொல்ல புனேவில் செயல்பட்டு வரும் ஒலிம்பிக் மெடலிஸ்ட் ககன் நரங்கின் ‘Gun for Glory அகாடமியில் துப்பாக்கி சுடுதல் பயிற்சிக்காக சேர்த்துள்ளனர். 

தொடக்கத்தில் அஹமதாபாத் கிளையில் பயிற்சி பெற்றுள்ளார். இந்நிலையில் இளவேனில் குறித்து கேள்விப்பட்ட ககன் நரங் அவருக்கு நேரடியாக பயிற்சி கொடுப்பதற்காக புனேவிற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். உடனடியாக அஹமதாபாத்திலிருந்து 600 கிலோ மீட்டர் தூரமுள்ள புனே நகருக்கு பயணம் செய்து அங்கேயே தங்கி பயிற்சி மேற்கொண்டுள்ளார் அவர். அதே சமயத்தில் படிப்பிலும் தான் கில்லாடி என்பதை நிரூபித்துள்ளார். 

தொடர்ச்சியாக தேசிய அளவிலான போட்டிகளில் ஜுனியர் பிரிவில் இளவேனில் அசத்தினார். அதன் மூலம் ஆசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அவரை தேடி வர அதிலும் சாதித்து காட்டி ஜுனியர் அளவிலான சர்வதேச துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பின் பதிவு செய்யப்பட விளையாட்டு வீரராக இணைந்தார். அதன் மூலம் சர்வதேச அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது. 

2018-இல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஜுனியர் உலக கோப்பை போட்டியில் தங்கம் வென்ற கையோடு பத்திரிகையாளர்களிடம் இளவேனில் தெரிவித்தது ‘இந்த போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் எனக்கு முட்டியில் காயம் ஏற்பட்டிருந்தது. வலி இருக்கிறது என்று சொன்னால் பயிற்சி செய்ய அனுமதி கிடையாது என்பதால் அதை மறைத்து விட்டு பயிற்சியை மேற்கொண்டேன். அதற்கான பலனை தற்போது பெற்றுள்ளேன். நிச்சயம் வெற்றி பெறுவேன் என்பது எனக்கு தெரியும். இருந்தாலும் உலக சாதனை அளவுக்கு புதிய ரெக்கார்ட் படைப்பேன் என நான் நினைக்கவில்லை. இந்த வெற்றியை  ககன் நரங் சாருக்கும், என் பெற்றோருக்கும் அர்ப்பணிக்கிறேன். தொடர்ச்சியாக பல பதக்கங்களை இந்தியாவிற்காக பெற்று தர விரும்புகிறேன்’ என்றார்.

அவர் சொன்னதை போலவே 2019இல் மட்டும் சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் மூன்று தங்கப்பதக்கத்தை அவர் வென்றுள்ளார்.  துப்பாக்கி சுடுதலில் கடந்தாண்டு சிறந்த வீராங்கனைக்கான கோல்டன் டார்கெட் விருதை இளவேனில் பெற்றிருந்தார்.