விளையாட்டு

7 ஆண்டுகளாக ஐசிசி கோப்பைகளை ஏன் வெல்ல முடியவில்லை ? - புவனேஷ்வர் விளக்கம்

jagadeesh

2013 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் ஐசிசி கோப்பைகளை வெல்ல முடியாததற்குத் துரதிருஷ்டமே காரணம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார். 

தோனி தலைமையிலான இந்திய அணி இறுதியாக 2013 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றியது. அதன் பின்பு 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் தோனி தலைமையிலான அணி அரையிறுதியோடு வெளியேறியது. இதனையடுத்து கோலி தலைமையிலான அணி 2016 டி20 உலகக் கோப்பை, 2017 சாம்பியன்ஸ் கோப்பை, 2019 உலகக் கோப்பை ஆகியவற்றை வெல்ல முடியாமல் நாடு திரும்பியது.

இது குறித்து "ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ" தளத்துக்குப் பேட்டியளித்த இந்திய அணியின் வேகபந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் " 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பையை மட்டுமே இறுதியாக வென்றோம். அதன் பின்பு ஐசிசி நடத்தும் கோப்பைகளை வெல்ல முடியவில்லை. சில தொடர்களில் இறுதி ஆட்டம், அரையிறுதி வரை மட்டுமே சென்று இருக்கிறோம். 2015 உலகக் கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தோம், 2019 அரையிறுதியில் முதல் 3 பேட்ஸ்மேன்களை விரைவாக இழந்தது தோல்விக்கான காரணம். எங்களுக்கு அதிருஷ்டமில்லாமல் போய்விட்டது" என்றார்.

மேலும் தொடர்ந்த அவர் "250 ரன்களுக்கு எதிர் அணியைக் கட்டுப்படுத்தியும் தோல்வியடைவது எப்போதாவது தான் நடக்கும். அது ஒரு துரதிருஷ்டம். அந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடினோம். ரோகித் சர்மா 6 சதங்களை விளாசினார், கோலியும் சிறப்பாகச் செயலாற்றினார். மிக முக்கியமாக அணியில் தோனியும் இருந்தார். ஏனோ எங்களுக்கு அரையிறுதிப் போட்டி துரதிருஷ்டமாக அமைந்துவிட்டது" எனத் தெரிவித்துள்ளார்.