விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில், ஆடவருக்கான ஜூனியர் பிரிவில் அமெரிக்காவில் வசிக்கும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சமீர் பானர்ஜி சாம்பியன் பட்டம் வென்றார்.
இறுதிப்போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த விக்டர் லிலோவை எதிர்த்து சமீர் களமிறங்கினார். ஒரு மணி நேரம் 22 நிமிடங்கள் நடந்த இந்தப் போட்டியில் 7-5, 6-3 என்ற நேர் செட்களில் சமீர் பானர்ஜி வெற்றி பெற்று, கோப்பையை கைப்பற்றினார். முன்னதாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6ஆவது முறையாக ஆடவர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார்.
இறுதிப்போட்டியில் இத்தாலியின் பெர்ரெட்டினியை 6-7,6-4,6-4,6-3 என்ற செட்களில் தோற்கடித்தார். இந்த வெற்றியின் மூலம் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றுள்ள ரோஜர் ஃபெடரர், ரஃபேல் நடாலின் சாதனையை சமன் செய்தார் ஜோகோவிச். ரோஜர் ஃபெடரர், ரஃபேல் நடால், ஜோகோவிச் ஆகியோர் தலா 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளனர்.