olympic, india x page
விளையாட்டு

2036 ஒலிம்பிக்கை நடத்த இந்தியா விருப்பம்.. சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலிடம் விண்ணப்பம் சமர்பிப்பு!

2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் தொடரை நடத்துவதற்கு இந்தியா விருப்பம் தெரிவித்து, அதற்கான விண்ணப்பத்தை சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலிடம் சமர்பித்துள்ளது.

Prakash J

உலகில் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவாக ஒலிம்பிக் பார்க்கப்படுகிறது. இந்த ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு (2024), பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் கடந்த ஜூலை மாதம் 26ஆம் தேதி தொடங்கிய ஒலிம்பிக் திருவிழா, கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.

இந்தப் போட்டியில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமைகளை நிரூபித்து பதக்கங்களை வேட்டையாடினர். இந்தியா சார்பில், 117 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றதில், அவர்கள் 5 வெண்கலம் மற்றும் 1 வெள்ளிப் பதக்கத்துடன் 6 பதக்கங்களைக் கைப்பற்றினர்.

அதேநேரத்தில், பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் இந்திய அணி, 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கத்துடன் 18-வது இடம் பிடித்தது. இதில் இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், 2028ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது. தொடர்ந்து, 2032ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற உள்ளது. இதையடுத்து, 2036ஆம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்திய ஒலிம்பிக் சங்கம் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஒலிம்பிக் தொடருக்கான ஏற்பாடுகளை மற்றும் உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு பல ஆண்டுகள் ஆகும் என்பதால், அடுத்த மூன்று ஒலிம்பிக் தொடர்கள் எந்த நாட்டில், எந்த நகரத்தில் நடைபெற உள்ளது என்பது குறித்த விஷயங்கள் முன்கூட்டியே அறிவிக்கப்படும். அந்த வகையில் 2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் தொடரை நடத்துவதற்கு இந்தியா, சவூதி அரேபியா, கத்தார், மெக்சிகோ, இந்தோனேசியா, துருக்கி, போலந்து மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் விருப்பம் தெரிவித்து இருக்கின்றன. மேலும் சில நாடுகளும் விருப்பம் தெரிவிக்க வாய்ப்பு உள்ளது.

இதையும் படிக்க: ”சல்மான் கானின் Ex லவ்வராக அறியப்படுவது மிகப்பெரிய சாபக்கேடு” - நடிகை சோமி அலி

அந்த வகையில், 2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த விருப்பம் தெரிவித்து கடந்த அக்டோபர் 1ஆம் தேதி சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலுக்கு, இந்திய ஒலிம்பிக் சங்கம் தனது விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துள்ளது.

இந்தியாவில் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்குத் தகுதியான நகரங்கள், அவற்றில் உள்ள வசதிகள், முறைப்படி தேவையான தகவல்கள் அனைத்தும் அந்த விண்ணப்பத்தில் அளிக்கப்பட்டுள்ளன. என்றாலும், சர்வதேச ஒலிம்பிக் அமைப்பே, இதுகுறித்து ஆய்வு செய்து முடிவை அறிவிக்கும். ஒருவேளை, 2036இல் ஒலிம்பிக் போட்டிகளை இந்தியா நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டால், அப்போட்டிகள் அனைத்தும் அகமதாபாத்தில் நடைபெற வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த மகத்தான வாய்ப்பின் மூலம் இந்தியாவுக்கான பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம், இளைஞர் வளர்ச்சி ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் பலன்கள் ஏற்படும் எனக் கருதப்படுகிறது.

முன்னதாக, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மும்பையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் 141வது மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி 2036ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்துவது குறித்து பேசியிருந்தார். அவர், ”2036ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா தயாராகிக் கொண்டிருக்கிறது. மேலும் அதற்கான முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படும். இது 140 கோடி இந்தியர்களின் கனவு” எனக் கூறியிருந்தார்.

இதையும் படிக்க: 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் Afro -Asia தொடர்| பாகிஸ்தான் வீரர்களுடன் இணையும் இந்திய ஸ்டார்ஸ்!