விளையாட்டு

ஒலிம்பிக்கில் 41 ஆண்டுகால கனவு! வரலாற்றை மீண்டும் வசமாக்குமா இந்திய ஹாக்கி அணி?

ஒலிம்பிக்கில் 41 ஆண்டுகால கனவு! வரலாற்றை மீண்டும் வசமாக்குமா இந்திய ஹாக்கி அணி?

jagadeesh

ஒரு காலத்தில் ஒலிம்பிக் ஹாக்கியில் கொடி கட்டி பறந்தது இந்திய அணி. 1980-களுக்கு பிறகு சறுக்கலை சந்தித்து வரும் இந்திய ஹாக்கி அணி, 41 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக் பதக்கத்தை பறிக்கும் முனைப்புடன் உள்ளது.

இன்னும் 32 நாட்கள் அரை நூற்றாண்டு காலம் ஒலிம்பிக் ஹாக்கியில் வல்லரசாக இருந்த பெருமை இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு உண்டு. 1928-ஆம் ஆண்டு நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி தொடங்கி 1980-ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி வரை 52 ஆண்டுகளில் 8 தங்கப் பதக்கங்களுடன் ஹாக்கியில் மகுடம் சூடி வந்தது இந்திய அணி. 1960-ஆம் ஆண்டு ரோமில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், 68 மற்றும் 72-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கங்களும் இந்திய அணியின் மகுடத்தில் ஜொலித்தன.

1980ஆம் ஆண்டில் தமிழக வீரர் வாசுதேவன் பாஸ்கரன் தலைமையிலான இந்திய ஹாக்கி அணி, தங்கப் பதக்கம் வென்றதே தற்போது வரை கடைசி பதக்கமாக உள்ளது. அதன்பிறகு 41 ஆண்டுகளாக கானல் நீராகவே இருக்கும் பதக்கத்தை பறிக்கும் நம்பிக்கையுடன், டோக்யோ ஒலிம்பிக் போட்டிக்கான 16 பேர் கொண்ட இந்திய ஆடவர் ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஒலிம்பிக் போட்டியில் விளையாடிய கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ், மன்ப்ரீத் சிங், ஹர்மன்ப்ரீத் சிங், ரூபிந்தர் பால் சிங், சுரேந்தர் குமார், மன்தீப் சிங், ஆகிய வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். அனுபவ வீரர் பிரேந்தர லக்ரா, நீலகண்ட ஷர்மா உள்ளிட்ட 10 வீரர்கள் புதிதாக ஒலிம்பிக் களத்திற்கு செல்லவுள்ளனர்.

சர்வதேச ஹாக்கி தர வரிசையில் இந்திய அணி ஐந்தாவது இடத்தில் உள்ளது. பெல்ஜியம், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, நெதர்லாந்து அணிகள் முதல் நான்கு இடங்களில் உள்ளன. 6 ஆவது இடத்தில் உள்ள அர்ஜென்டினா, 7 ஆவது இடத்தில் உள்ள இங்கிலாந்து, 8 ஆவது இடத்தில் உள்ள நியுசிலாந்து, ஒன்பதாவது இடத்தில் உள்ள ஸ்பெயின் ஆகிய அணிகளும் சர்வதேச அளவில் சவால் நிறைந்ததாகவே உள்ளது.

அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, நியுசிலாந்து, ஸ்பெயின் ஆகிய வலிமை வாய்ந்த அணிகளுடன் போட்டியை நடத்தும் ஜப்பான் அடங்கிய ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, பதக்கத்தை வென்று திரும்புமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.