ஆஸ்திரேலியாவில் முகாமிட்டு கிரிக்கெட் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்ததோடு ஆடும் லெவனிலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அற்புதமாக பந்து வீசி வருகிறார் தமிழகத்தை சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் ‘யார்க்கர்’ நடராஜன். இந்திய அணி டி20 தொடரை வெல்ல நடராஜனின் ஆட்டமும் பெரிய அளவில் கைகொடுத்தது.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய பவுலிங் யூனிட்டின் புதிய நட்சத்திரமாக மிளிர தொடங்கியுள்ள நடராஜனிடம் மூன்றாவது டி20 ஆட்டத்திற்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவத்தை பகிரும் வகையில் அவருடன் தமிழில் பேசியிருந்தார் வர்ணனையாளரும், இந்திய அணியின் முன்னாள் வீரருமான முரளி கார்த்திக்.
“மிகவும் சந்தோஷமா இருக்கிறது. பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா உடன் அறிமுக வீரராக களம் இறங்கிய அனுபவத்தை சொல்ல வார்த்தைகளே இல்லை. அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்ததும் என்னுடைய வேலையை சரியாக செய்ய வேண்டுமென மட்டுமே முடிவு செய்தேன். அதற்கு உடன் இருந்தவர்களும் உதவினார்கள். என்னுடைய பலமே யார்க்கர் தான் அந்த பலத்தை நம்பித்தான் விளையாட வேண்டுமென இறங்கினேன். அதே நேரத்தில் விக்கெட்டுக்கு ஏற்ற வகையில் கேப்டனிடம் எப்படி விளையாட வேண்டுமென கேட்டுக்கொண்டு அதற்கேற்ற வகையில் பந்து வீசினேன். நான் சாந்தமானவன். எதற்குமே ஆவேசம் அடைய மாட்டேன்” என நடராஜன் தமிழில் தெரிவித்தார்.
அவர் பேசிக் கொண்டிருந்தபோது ‘நட்டு… நட்டு…’ என அவரது பெயர் ஒலித்துக் கொண்டிருந்தது. அது இந்திய வீரர்களா அல்லது ரசிகர்களா என்பது உறுதியாகவில்லை.
நன்றி : SONY TEN 1