விளையாட்டு

“வார்னர் பேட் செய்ய… நடராஜன் பந்து வீச”... களைகட்டிய 4-வது டெஸ்ட் போட்டி

“வார்னர் பேட் செய்ய… நடராஜன் பந்து வீச”... களைகட்டிய 4-வது டெஸ்ட் போட்டி

EllusamyKarthik

இந்திய கிரிக்கெட் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளரும், தமிழகத்தை சேர்ந்தவருமான தங்கராசு நடராஜன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக விளையாடி வருகிறார். இதே போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக தொடக்க வீரர் டேவிட் வார்னரும் விளையாடி வருகிறார். நடராஜனும், வார்னரும் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடினர்.

நடராஜன் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் விளையாடுவது உறுதி ஆனதும் முதல் ஆளாக நடராஜனுக்கு வாழ்த்து சொல்லியதோடு ‘வாங்க நடராஜன் ஆஸ்திரேலியாவில் சந்திக்கலாம்’ என சொன்னதும் வார்னர்தான். நடராஜன் ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் விளையாடி இருந்தாலும் வார்னர் காயத்தினால் நடராஜன் விளையாடிய போட்டிகளில் விளையாடவில்லை.

வார்னர் மூன்றாவது டெஸ்ட்டிலேயே அணிக்குள் விளையாட ரிட்டர்னாகி இருந்தாலும் நடராஜன் நான்காவது டெஸ்ட்டில்தான் அறிமுகமானார். இந்த டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் முதல் ஓவரிலேயே சிராஜ்  வார்னரின் விக்கெட்டை வீழ்த்திவிட்டார். அதனால் நடராஜன் அப்போது வார்னருக்கு பந்து வீச முடியவில்லை. 

இரண்டாவது இன்னிங்ஸில் நடராஜன் 3 ஓவர்களை வீசியுள்ளார். இதில் வார்னருக்கு 12 பந்துகள் வீசியுள்ளார். அதில் வார்னர் 5 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். வார்னருக்கு நடராஜன்  டைட் லைனில்  பந்து வீசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. “வார்னர் பேட் செய்ய… நடராஜன் பந்து வீச” என காபா டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்டம் நல்லதாகவே முடிந்துள்ளது.