விளையாட்டு

இதெல்லாம் ஒரு மனநோய்! துரோகி எனக் கூறி அர்ஷ்தீப்சிங்கை கோபமூட்டிய ரசிகர்! அதிர்ச்சி வீடியோ

இதெல்லாம் ஒரு மனநோய்! துரோகி எனக் கூறி அர்ஷ்தீப்சிங்கை கோபமூட்டிய ரசிகர்! அதிர்ச்சி வீடியோ

ச. முத்துகிருஷ்ணன்

இலங்கைக்கு எதிரான போட்டி நிறைவடைந்து இந்திய அணி வீரர்கள் தங்களது வாகனத்தில் ஏறும்போது அங்கு வந்த ரசிகர் ஒருவர் இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப்சிங்கைப் பார்த்து “துரோகி” என்று அழைத்த வீடியோ சர்ச்சையை கிளப்பியுள்ளது.

செவ்வாய்கிழமை (நேற்று) இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த பின்னர், இந்திய வீரர்கள் அணி பேருந்தில் ஏறும் போது, இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், தன்னை துரோகி என்று அழைத்த ரசிகரை கோபமடைந்து முறைத்துப் பார்க்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், பாகிஸ்தானுக்கு எதிரான கேட்ச்சை கைவிட்டதற்காக அர்ஷ்தீப்பை அந்த ரசிகர் கேலி செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முக்கியமான ஒரு கேட்சை தவறவிட்டதற்காக சமூக ஊடக தளங்களில் ரசிகர்களிடமிருந்து சில கடுமையான விமர்சனங்களைப் பெற்ற இளம் இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், இலங்கைக்கு எதிரான மற்றொரு போட்டியில் உற்சாகமான கடைசி ஓவரில் தனது திறமையை நிரூபித்தார். இறுதி ஓவரில் ஏழு ரன்களை மட்டும் பாதுகாத்த போது, வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் இந்திய அணிக்கான சாத்தியமற்ற வெற்றியை கிட்டத்தட்ட பெற வைக்க முயன்றார்.

சமூக ஊடக தளங்களில் ரசிகர்களின் மோசமான விமர்சனங்களுக்கு ஆளான அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆதரவாக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உட்பட பல முன்னாள் மற்றும் தற்போதைய இந்திய கிரிக்கெட் வீரர்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இலங்கைக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த பின் இந்திய அணி வீரர்கள் தங்களது வாகனத்தில் ஏறும்போது அங்கு வந்த ரசிகர் ஒருவர் இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப்சிங்கைப் பார்த்து “துரோகி” என்று அழைத்துள்ளார்.

வாகனத்தில் ஏறவந்த அர்ஷ்தீப் சிங் சில விநாடிகள் நின்று அந்த ரசிகரை கோபமடைந்து முறைத்து பார்க்கிறார். பின்னர் அவர் எதுவும் பேசாமல் வாகனத்திற்குள் ஏறிவிட, அங்கிருந்த விளையாட்டுச் செய்தி நிருபர்களும், மற்ற நபர்களும் வசைபாடிய ரசிகரை திட்டத் துவங்கியுள்ளனர். அவரை எப்படி நீ துரோகி என்று சொல்லலாம் என்று கேள்விக்கணைகளை தொடுக்க, இறுதியாக வேறு வழியின்றி அந்த நபர் மன்னிப்பு கேட்கும் காட்சிகளும் வைரலாகும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

எல்லா மனிதர்களும் தங்கள் வாழ்வில் சில தவறுகளைச் செய்வார்கள்! அதுதான் மனித இயல்பே! தவறுகளில் இருந்து பாடம் படித்துதான் நாகரிமான சமூகமாக, ஆறறிவுள்ள ஜீவனாக திகழ்கிறோம்! அதற்காக தவறுகளை விமர்சிக்கவே கூடாது என்றால் நிச்சயமாக விமர்சிக்கலாம். அந்த தவறு மீண்டும் நிகழக்கூடாது என்ற அக்கறை தொனியில் அது இருப்பது நல்லது. அதுவே சிறந்த விமர்சனம்! மற்றபடி “நீ துரோகி” என்று சொல்வதெல்லாம் விமர்சனமல்ல! மனநோய்!