விளையாட்டு

சின்னப்பம்பட்டி டூ கான்பரா - நடராஜனின் வெற்றிக் கதை!

EllusamyKarthik

தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் கரம்பாக கிடக்கும் வயல்வெளி பகுதியில் இளைஞர்கள் ஒன்று கூடி கிரிக்கெட் விளையாடுவார்கள். அவர்களில் ஒருவர் தான் 29 வயதான தங்கராசு நடராஜன். இந்திய அணிக்காக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அறிமுக வீரராக களம் இறங்கி முதல் விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தார்.

யார் இவர்?

சேலம் மாவட்டத்தில் உள்ள சின்னப்பம்பட்டி தான் நடராஜனின் சொந்த ஊர். சிறு வயதில் டிவியில் கிரிக்கெட் பார்த்து ஏற்பட்ட ஆர்வத்தினால் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தவர். ஊரில் இருக்கும் சக இளைஞர்களோடு ரப்பர் பால், டென்னிஸ் பால் என வயல்வெளியில் கல்லி கிரிக்கெட் விளையாடியவர். பள்ளி முடித்த கையோடு கல்லூரியில் சேர்ந்துள்ளார். அப்போது அவர் வகுப்புக்கு போன நேரத்தை காட்டிலும் கிரவுண்டில் இருந்த நேரம் தான் அதிகம் என ஒருமித்த சொல்கின்றனர் அவரது நண்பர்கள்.

கல்லூரி முடித்த கையேடு நடராஜனுடன் விளையாடி கொண்டிருந்த நண்பர்கள் எல்லோரும் அடுத்த கட்டத்திற்கு நகர அவர் மட்டும் கிரிக்கெட்டை உயிர்மூச்சாக  வாழ்ந்து வந்துள்ளார். அப்போது தான் அவரது கிராமத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ், நடராஜனுக்கு நம்பிக்கை கொடுத்து சென்னையில் உள்ள கிரிக்கெட் கிளப்பில் விளையாட சொல்லியுள்ளார். நடராஜனும் கிரிக்கெட் தான் கெரியர் என முடிவு செய்த காரணத்தினால் சென்னைக்கு புறப்பட்டுள்ளார்.

கிளப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதால் டிவிஷ்னல் லெவலில் விளையாட தேர்வாகியுள்ளார். அப்படியே அடுத்த சில நாட்களில் மாநில அணிக்காகவும், ரஞ்சி கிரிக்கெட்டிலும் விளையாடும் வாய்ப்பு வந்துள்ளது. தொடர்ந்து TNPL விளையாடி அதன் மூலம் IPL அரங்கில் என்ட்ரி கொடுத்தார் நடராஜன்.

“அவனோட கேம் மேல கவனம் செலுத்தி கடினமா ட்ரெயின் செய்தான். இன்னைக்கு அதுக்கான ரிசல்ட அறுவடை செய்துகிட்டு இருக்கான்” என்கிறார்  நடராஜனின் வழிகாட்டியான  ஜெயப்பிராகாஷ்.

2017 வாக்கில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடும் வாய்ப்பு நடராஜனுக்கு கிடைத்தது. தொடர்ந்து 2018 சீசனில் ஹைதராபாத் அணி அவரை ஏலத்தில் எடுத்தது. அதன் பிறகு அனைத்துமே ஏற்றமாக அமைந்தது நடராஜனுக்கு.

கிரிக்கெட் மூலமாக அவர் குடும்பத்தை முன்னேற்றியது மட்டுமில்லாமல் தன்னை போன்றே கிராமங்களில் கிரிக்கெட் விளையாட்டை உயிர் மூச்சாக சுவாசிக்கிற பலருக்கு முன்னுதாரணமாகவும் உயர்ந்து நிக்கிறார் நடராஜன்.  

நடராஜனின் பெற்றோர்கள் இருவருமே தினக்கூலி தொழிலாளர்கள். கிரிக்கெட் விளையாட்டில் கிடைத்த சம்பாத்தியத்தின் மூலம் சொந்தமாக கான்க்ரீட் வீடு ஒன்றை அவர் கட்டியுள்ளார்.  அதோடு தனது கிராமத்தில் கிரிக்கெட் கனவோடு இருக்கின்ற இளைஞர்களுக்கு முறையான பயிற்சியும், வழிகாட்டுதலும் கிடைக்கின்ற வகையில் கிரிக்கெட் அகாடமி ஒன்றையும் அவர் கடந்த 2017 இல் நிறுவியுள்ளார். 

அண்மையில் அமீரகத்தில் முடிந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக 16 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார் நடராஜன். அதன் மூலம் இந்திய தேர்வு குழுவின் கவனத்தை தன் பக்கமாக திருப்பி ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் தனக்கான இடத்தை உறுதி செய்தார்.  

2020 ஐபிஎல் சீசனில் 377 பந்துகளை வீசியுள்ளார் நடராஜன். அதில் 136 பந்துகள் டாட் பந்துகளாக வீசியிருந்தார். முதலில் ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில் பேக் அப் பவுலராக இடம் பிடித்தார் நடராஜன். 

தொடர்ந்து டி20 தொடருக்கான அணியில் இடம் பிடித்தார். ஒருநாள் போட்டிகளுக்ககான அணியிலும் காயத்தினால் அவதிப்பட்டு வரும் வீரருக்கு மாற்றாக இடம் பிடித்தார். இருப்பினும் மூன்று போட்டிகள் கொண்ட முதல் இரண்டு போட்டிகளில் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டிருந்தார் நடராஜன். இந்தியா ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியாவிடம் இழந்த நிலையில் மாற்று வீரராக களம் இறங்கும் வாய்ப்பை. அவருக்கு இன்னிங்க்ஸை பும்ராவுடன் இணைந்து நியூ பாலில் பந்து வீசும் வாய்ப்பை கொடுத்தார் கோலி. முதல் ஸ்பெல்லை அட்டகாசமாக வீசி ஓப்பனர் மார்னஸ் லபுஷேனை க்ளீன் போல்டாக்கி அசத்தினார்.  

தொடர்ந்து ஆட்டத்தில் டெத் ஓவர்களிலும் பந்து வீசினார் நடராஜன். பத்து ஓவர்கள் வீசி 70 ரன்களை விட்டுக் கொடுத்ததோடு இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். அவரை சக கிரிக்கெட் வீரர்கள், அனுபவ வீரர்கள், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நடிகர்களும் புகழ்ந்து வருகின்றனர்.

- எல்லுசாமி கார்த்திக்