நியூசிலாந்து அணியுடனான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்க இங்கிலாந்து வரும் இந்திய வீரர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.
முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையே இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் நகரில் ஜூன்18 - 22 தேதிகளில் நடைபெறுகிறது. இதையொட்டி மும்பையில் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலில் இருக்கும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியினர் வருகிற 2- ஆம் தேதி தனிவிமானத்தில் புறப்பட்டு மறுநாள் இங்கிலாந்தை அடைகிறார்கள்.
வீரர்கள் தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டதற்கான சான்றிதழை எடுத்து வர வேண்டும். மேலும் இங்கிலாந்து சென்றதும் இந்திய வீரர்கள் நேரடியாக சவுத்தாம்டன் மைதான பகுதியில் உள்ள ஓட்டலுக்கு அழைத்து செல்லப்படுவார்கள். அங்கு மீண்டும் ஒருமுறை கொரோனா பரிசோதனை மேற்கொண்ட பிறகு, மீண்டும் தனிமைப்படுத்தலை தொடங்குவார்கள்.
தனிமைப்படுத்தலின் போதும் முறையாக பரிசோதனை நடத்தப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வீரர்களுக்கும் கொரோனா இல்லை என்று தெரிந்த பின்புதான் மைதானத்தில் பயிற்சிக்காக அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.