விளையாட்டு

அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!

EllusamyKarthik

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியை நரேந்திர மோடி மைதானத்தில் விளையாடி வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 48.4 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112 ரன்களை குவித்தது. தொடர்ந்து இந்தியா தனது முதல் இன்னிங்க்ஸை தொடங்கியது. 

ரோகித்தும், கில்லும் இந்தியாவுக்காக இன்னிங்க்ஸை தொடங்கினார். கில் 11 ரன்களிலும், புஜாரா டக் அவுட்டும் ஆகினர். பின்னர் வந்த கோலியுடன் ரோகித் 64 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார். அதோடு ரோகித் 12வது அரை சதத்தையும் பதிவு செய்தார். 

ஆட்டத்தின் கடைசி ஓவரை லீச் வீசினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் கேப்டன் விராட் கோலி 27 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்திய அணி முதல் நாள் முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 99 ரன்களை எடுத்துள்ளது. ரோகித் சர்மா 57, ரகானே 0 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணியை கடக்க இன்னும் 13 ரன்கள் மட்டுமே தேவை.

இந்திய அணியிடம் ரிஷப் பண்ட், அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் என இன்னும் பேட்ஸ்மேன்கள் நிறையவே இருக்கிறார்கள். அதனால், இந்திய அணி 250 ரன்களுக்கு மேல் எடுத்தாலே நல்ல ஸ்கோராக இருக்கும். இரண்டாவது இன்னிங்ஸை விளையாடும் இங்கிலாந்து அணிக்கு அது நெருக்கடியாக அமையும். 

எப்படி இருந்தாலும் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற்ற முதல் நாள் ஆட்டம் இந்திய ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையிலே அமைந்தது. அக்ஸர் பட்டேலும், அஸ்வினும் இந்திய ரசிகர்களுக்கு விக்கெட்டுகளை வீழ்த்தி மகிழ்ச்சியை அளித்தனர்.