விளையாட்டு

கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் ஜிவ்..!

கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் ஜிவ்..!

Rasus

இந்திய கிரிக்கெட் வாரியம், வீரர்களின் சம்பளத்தை இரு மடங்கு உயர்த்தியுள்ளது. இதன்படி 2017-2018 ஆம் ஆண்டு ‘ஏ’ பிரிவு வீரர்களுக்கு ரூ 2 கோடி சம்பளமும், ‘பி’ பிரிவு வீரர்களுக்கு ரூ 1 கோடி சம்பளமும், ‘சி’ பிரிவு வீரர்களுக்கு ரூ. 50 லட்சம் சம்பளமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் இந்திய அணிக்கான வீரர்களை, தரம் வாரியாக ஒப்பந்தம் செய்து வருகிறது. அந்தவகையில், இந்த ஆண்டுக்கான இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஒப்பந்த பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டது. புதிதாக அறிவிக்கப்பட்ட ஒப்பந்தத்தில் 32 வீரர்கள் உள்ளனர்.

இந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜடேஜா, புஜாரா, முரளி விஜய் ஆகிய மூவரும் ‘ஏ’ பிரிவுக்கு முன்னேற்றியுள்ளனர். ஆனால், ஒரு நாள் போட்டிகளிலும், 20 ஓவர் போட்டிகளிலும் இந்திய அணியில் பொதுவாக இடம்பிடிக்கும் சுரேஷ் ரெய்னாவின் பெயர் புதிய ஒப்பந்தத்தில் இடம்பெற்வில்லை.

ஆண்டு சம்பளம் மட்டுமல்லாமல், வீரர்கள் விளையாடும் ஒவ்வொரு டெஸ்ட் போட்டிக்கும் ரூ.15 லட்சமும், ஒரு நாள் போட்டிக்கு ரூ. 6 லட்சமும், 20 ஓவர் போட்டிக்கு ரூ. 3 லட்சமும் சம்பளமாக வழங்கப்படும். இப்போது அறிவிக்கப்பட்டுள்ள சம்பளம், அக்டோபர் 2016 முதல் எடுத்துக்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது அறிவிக்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் தோனி, கோலி, புஜாரா, ரஹானே, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முரளி விஜய் ஆகிய 7 வீரர்கள் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளனர்.

‘பி’ பிரிவில், ரோகித் ஷர்மா, கே.எல்.ராகுல், புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், விருதிமான் சாஹா, ஜஸ்ப்ரிட் பும்ரா, யுவராஜ் சிங் ஆகிய 9 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

‘சி’ பிரிவில், ஷிகர் தவான், அம்பத்தி ராயுடு, அமித் மிஸ்ரா, மனிஷ் பாண்டே, அக்சர் படேல், கருண் நாயர், ஹர்திக் பாண்டியா, ஆஷிஷ் நெஹ்ரா, கேதர் ஜாதவ், யுஸ்வேந்திரா சாஹல், பார்த்திவ் படேல், ஜெயந்த் யாதவ், மன்தீப் சிங், தவல் குல்கர்னி, சர்துல் தாக்கூர், ரிஷாபத் பந்த் ஆகிய 16 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.