விளையாட்டு

“என் வாழ்க்கையின் சிறந்த நாள்” - வாஷிங்டன் சுந்தரின் தந்தை நெகிழ்ச்சி!

“என் வாழ்க்கையின் சிறந்த நாள்” - வாஷிங்டன் சுந்தரின் தந்தை நெகிழ்ச்சி!

EllusamyKarthik

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களம் இறங்கிய வாஷிங்டன் சுந்தர் அபாரமாக பேட்டிங் மற்றும் பவுலிங்கில் கலக்கியதன் மூலம் இந்திய அணி தொடரை வெல்லவும் காரணமாக அமைந்துள்ளார். முதல் போட்டி என்ற தயக்கம் எதுவும் இல்லாமல் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய பந்துவீச்சை துவம்சம் செய்தார். அதன் மூலம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியிலும் வாஷிங்டன் இடம்பெற்றுள்ளார். இந்நிலையில் ’இந்த நாள் என் வாழ்க்கையின் சிறந்த நாள்’ என நெகிழ்கிறார் வாஷிங்டன் சுந்தரின் தந்தை சுந்தர்.

“தந்தை மகனுக்கு ஆற்றும் கடமை இவன் தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல் - மிக பெருமையாக உணர்கிறேன். தமிழகத்தை சேர்ந்த மூவர் விளையாடி உள்ளனர் என்பது கூடுதல் பெருமையாக உள்ளது. முதல் போட்டியிலேயே வாஷிங்டன் சுந்தரின் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் மிக பிரமாதமாக இருந்தது.

இதனை கண்டு நான் ஆச்சரியப்படவில்லை. குழந்தைப் பருவத்திலிருந்தே வாஷிங்டன் சுந்தர் அபரிதமான பேட்டிங் திறமையை நான் கண்டுள்ளேன். இந்த முறை ஐபிஎல் செல்லும் முன்பாக வாஷிங்டன் சுந்தர் நல்ல முறையில் பயிற்சி மேற்கொண்டு தயாராக இருந்தார். அப்போதே இந்த சீசனில் அவர் சாதிப்பார் என நினைத்தேன். இதேபோன்று சிறப்பாக வரும் காலங்களிலும் விளையாட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.