விளையாட்டு

‘விராட் கோலி ட்விட்டரில் அனைத்தையும் படிப்பார்’ ஆடம் சாம்பா

‘விராட் கோலி ட்விட்டரில் அனைத்தையும் படிப்பார்’ ஆடம் சாம்பா

EllusamyKarthik

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி ட்விட்டரில் அனைத்து போஸ்டுகளையும் படிப்பார் என தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் சாம்பா. 

கோலியும், சாம்பாவும் அண்மையில் முடிந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

“2016 ஐபிஎல் தொடரின் போது ஆர்சிபி அணியில் விளையாடிய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்ஸன் ‘கோலி மற்றும் டிவில்லியர்ஸ்’ படங்களை ட்விட்டரில் பகிர்ந்து ‘ஒவ்வொரு ஆட்டத்தையும் நீங்கள் முடித்து கொடுப்பது எங்களது அதிர்ஷ்டம்’ என பாராட்டியிருந்தார். அதற்கு நான் ‘இவர்கள் யார் நட்பே?’ என ரீ ட்வீட் செய்திருந்தேன். அதற்கு அப்போது இந்திய ரசிகர்கள் எனக்கு பதில் ட்வீட் செய்திருந்தனர். 

2016 சீசனில் நான் ஐபிஎல் தொடரில் பூனே அணிக்காக விளையாடினேன். அது தான் ஐபிஎல் அரங்கில் எனது முதல் போட்டி. ஆர்சிபி உடனான அந்த போட்டியில் நான்கு ஓவர்களை வீசினேன். கடைசி பந்தை பவுண்டரிக்கு விளாசிய கோலி என் பக்கத்தில் வந்து ‘ட்விட்டரிலிருந்து கொஞ்சம் தள்ளியே இருங்கள் நட்பே’ என சொன்னார். ‘கடவுளே…  ட்விட்டரில் அனைத்தையும் இவர்  படிப்பாரா’ என அதிர்ச்சி அடைந்தேன். அந்த போட்டியில் கோலி 108 ரன்களை விளாசினார்” என கோலி உடனான நினைவுகளை பகிர்ந்துள்ளார் சாம்பா.