விளையாட்டு

ஆஸி.,பவுலரின் தலையை தாக்கிய பந்து.. பேட்டை வீசிவிட்டு ஓடிச்சென்று உதவிய சிராஜ்!

ஆஸி.,பவுலரின் தலையை தாக்கிய பந்து.. பேட்டை வீசிவிட்டு ஓடிச்சென்று உதவிய சிராஜ்!

EllusamyKarthik

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியாவும், டி20 தொடரை இந்தியாவும் கைப்பற்றிய நிலையில் வரும் 17 ஆம் தேதி முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆரம்பமாக உள்ளது. அதற்கு இந்திய அணி வீரர்கள் ஆயத்தமாகும் வகையில் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய ஏ அணியுடன் விளையாடி வருகிறது. முதல் பயிற்சி ஆட்டம் சமனில் முடிந்த நிலையில் தற்போது இரண்டாவது பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது. 

முதல் நாளான நேற்று இந்திய அணி 194 ரன்களும், ஆஸ்திரேலிய ஏ அணி 108 ரன்களும் எடுத்திருந்தன. இந்தியா பேட்டிங் செய்த போது கேமரூன் க்ரீன் வீசிய 45 ஓவரின் முதல் பந்தை ஸ்ட்ரைட் திசையில் ஓங்கி அடித்தார் ஸ்ட்ரைக்கில் இருந்த பும்ரா. அந்த பந்து நேரடியாக பவுலர் க்ரீனின் தலையை நோக்கி செல்ல அதை தடுக்க தவறியதால் பந்து தலையில் பட்டது. இதனை நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் நின்று கொண்டிருந்த சிராஜ் கவனித்ததும் உடனடியாக பேட்டை கீழே போட்டுவிட்டு வேகவேகமாக ஓடி சென்று க்ரீனுக்கு உதவியதோடு, காயத்தின் நிலையையும் அறிந்தார். 

மாற்று அணி வீரர் என்றும் பாராமல் க்ரீன் அடிபட்டவுடன் சிராஜ் அவருக்கு உதவியது பலரது இதயத்தையும் வென்றுள்ளது. அவரது செயல் கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேன் கேம் என்பதையும் நிரூபித்துள்ளது.