நியூசிலாந்து பெண்கள் அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய பெண்கள் அணி அபார வெற்றி பெற்றது.
நியூசிலாந்தில் இந்திய பெண்கள் அணி சுற்றுப் பயணம் செய்து ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் பங்கேற்கிறது. அதன்படி இன்று முதல் ஒருநாள் போட்டி நேப்பியரில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற இந்திய பெண்கள் அணி, ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, இந்தியப் பெண்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 192 ரன்கள் மட்டுமேஎடுத்தது. இந்திய பெண்கள் அணியின், சுழற்பந்து புயல்களான ஏக்தா பிஷ்ட், பூனம் யாதவ் மற்றும் தீப்தி ஷர்மா ஆகியோர் விக்கெட்டுகளை எடுத்தனர்.
அதன்பின் களமிறங்கிய இந்திய பெண்கள் அணியானது, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 17 ஓவர்களில் ஸ்மிரிதி மந்தனா - 105 ரன்களையும், ஜெமிமாரோட்ரிகஸ் - 81 ரன்களையும் எடுத்தனர். இவர்களின் கூட்டு முயற்சியால், மொத்தம் 186 ரன்களை குவித்து வெற்றிக்கு வழி வகுத்தது ஆட்டத்தின் சிறப்பு.
32.2 ஓவர்களில் மந்தனா 105 ரன்களில் ஆட்டமிழந்தார். 33 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 193 ரன்களை குவித்து வெற்றி வாகை சூடியது. இதில் குறிப்பிடத்தக்கது என்னவெனில், 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய பெண்கள் அணி அபார வெற்றிப்பெற்றது. இதே மைதானத்தில் நேற்றையப் போட்டியில் நியூசிலாந்து ஆடவர் அணியை, இந்திய ஆடவர் அணி அபாரமாக விளையாடி வெற்றிப் பெற்றது குறிப்பிடத்தக்கது.