இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் நியூசிலாந்து மகளிர் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியானது அஹமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (அக்.24) தொடங்கியது. ஸ்மிரிதி மந்தனா தலைமையில் களமிறங்கிய இந்திய மகளிர் அணி, இன்றைய போட்டியில் டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது.
அதன்படி, தொடக்க வீராங்கனையாக இறங்கிய கேப்டன் ஸ்மிருதி 5 ரன்னில் ஏமாற்றினாலும், மற்றொரு தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா 33 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். அவருக்கு இணையாக யாஷ்திகா பாட்டியா 37 ரன்கள் எடுத்தார். அதுபோல் ஜெமிமா ரோட்ரிக்ஸும் 35 ரன்கள் எடுக்க, இந்திய அணியில் அதிகபட்சமாக தேஜல் ஹசாப்னிஸ் 42 ரன்களும், தீப்தி சர்மா 41 ரன்கள் எடுத்தனர். இறுதியில் இந்திய மகளிர் அணி 44.3 ஓவர்களில் 227 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
பின்னர், 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலபமான இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அவ்வணியின் தொடக்க வீராங்கனை சூஷி பேட்ஸ் 1 ரன்னில் வெளியேறினார். என்றாலும், பிலிம்மரும் (25) டவுனும் (26) இணைந்து ஓரளவு ரன் சேகரிப்பில் ஈடுபட்டனர். அவர்களுக்குப் பின் களமிறங்கிய கேப்டன் ஷோபி ட்வைன் 2 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றினார். ஆயினும் அதற்குப் பிறகு கைகோர்த்த ஹாலிடேவும் (39), மேடி கிரினும் (31) ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடினர்.
ஆயினும் அவர்களுக்குப் பின் களமிறங்கிய வீராங்கனைகளால் இந்திய அணியின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் வெறும் 40.4 ஓவர்களில் 168 அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன்மூலம் இந்திய அணி, 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்திய அணி தரப்பில் ராதா யாதவ் 3 விக்கெட்களயும், சைமா தாகூர் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். அணிக்காக 41 ரன்கள் மற்றும் 1 விக்கெட் எடுத்த தீப்தி சர்மா ஆட்டநாயகி விருது பெற்றார். இந்த வெற்றியின் இந்திய அணி 1-0 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகளுக்கான அடுத்த போட்டி இதே மைதானத்தில் வரும் 27ஆம் தேதி நடைபெற இருக்கிறது.