இந்தியா vs வங்கதேசம் pt web
விளையாட்டு

இரட்டையர்கள் கொடுத்த பிரம்மாண்ட வெற்றி.. 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கத்தை வீழ்த்திய இந்தியா

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

Angeshwar G

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 376 ரன்களை எடுத்திருந்தது. அதிகபட்சமாக அஸ்வின் 113 ரன்களையும், ஜடேஜா 86 ரன்களையும் எடுத்திருந்தனர். வங்கதேச அணியில் ஹாசன் மஹ்முத் 5 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். பின் தனது முதல் இன்னிங்ஸை ஆடிய வங்கதேச அணி மளமளவென விக்கெட்களை பறிகொடுத்து, 149 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி சார்பில் பும்ரா 4 விக்கெட்களையும், சிராஜ், அஸ்வின், ஆகாஷ் தீப், ஜடேஜா தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்களை இழந்து 287 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் 119 ரன்களையும், ரிஷப் பந்த் 109 ரன்களையும் எடுத்திருந்தனர். முதல் இன்னிங்சில் 227 ரன்களில் இந்தியா முன்னிலையில் இருந்ததால், வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

அதன்படி 2 ஆவது இன்னிங்சை தொடர்ந்த வங்கதேசம், நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், சீரான இடைவெளிகளில் விக்கெட்களை பறிகொடுத்த வண்ணமே இருந்தது. அதிகபட்சமாக வங்கதேச அணியின் கேப்டன் நஜ்மூல் ஹூசைன் சாண்டோ மட்டும் 82 ரன்களை எடுத்திருந்தார்.

முடிவில் வங்கதேச அணி 234 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்த நிலையில், இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. இந்திய அணியின் சுழல் இரட்டையர்களான ரவிஇந்திரன் (ரவீந்திர ஜடேஜா), ரவி சந்திரன் மீண்டும் வெற்றியைத் தேடித்தந்துள்ளனர்.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 144 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து திணறியபோது அஸ்வின் மற்றும் ஜடேஜா இணைந்தே இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர். அஸ்வின் தனது 6 ஆவது டெஸ்ட் சதத்தையும் பூர்த்தி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய டெஸ்ட் கிரிக்கட் வரலாற்றில் (1932 முதல்) முதல் முறையாக இந்தியாவின் டெஸ்ட் வெற்றி இந்தியாவின் டெஸ்ட் தோல்வி எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது. இந்தியா இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 179 வெற்றிகள் 178 தோல்விகளை அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.