விளையாட்டு

முதல்முறை சொந்த மண்ணில் ஆஸி.யை வென்று இந்தியா சாதனை

முதல்முறை சொந்த மண்ணில் ஆஸி.யை வென்று இந்தியா சாதனை

webteam

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை அந்நாட்டின் சொந்த மண்ணிலேயே வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்தது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்றது. 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. இதனால் மூன்றாவதாக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அனல் பறந்தது. ஆனால் அந்த டெஸ்டை இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் கோப்பையை இந்தியா இழக்காது என்ற நிலை ஏற்பட்டது. 

இதைத்தொடர்ந்து 4வது டெஸ்ட் போட்டி, கடந்த 2ஆம் தேதி சிட்னி மைதானத்தில் தொடங்கியது. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றாலோ, அல்லது போட்டி சமனில் முடிந்தாலோ இந்தியாவிற்கு கோப்பை என்ற நிலை இருந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் குவித்தது டிக்ளர் செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 300 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.

இதனால் ஃபாலோவான் முறைப்படி மீண்டும் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தது. 4 ஓவர்களுக்கு 6 ரன்களை ஆஸ்திரேலியா எடுத்திருந்த நிலையில், மழையின் குறுக்கீட்டால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் மழை தொடர்ந்து பெய்ததால், மைதானம் விளையாட முடியாத நிலையை அடைந்தது. இதனால் போட்டி சமனிலை அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியுள்ளது. 

இது சாதாரண வெற்றி அல்ல. இது ஒரு சாதனை வெற்றியாகும். கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை ஒருமுறை கூட இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை. சுமார் 71 ஆண்டுகள் வரலாற்றில் முதல்முறையாக ஆஸ்திரேலியாவை, அதன் சொந்த மண்ணில் இந்தியா வீழ்த்தியுள்ளது. அதேசமயம் ஆஸ்திரேலியாவை சொந்த மண்ணில் வீழ்த்திய கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். இந்தியா மட்டுமல்ல ஆசியாவிலேயே ஆஸ்திரேலியாவை சொந்த மண்ணில் வீழ்த்திய கேப்டன் என்ற பெருமையையும் கோலி பெற்றுள்ளார். இதனை இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.