விளையாட்டு

ஜடேஜா அசத்தல் - 104 ரன்னில் சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்

rajakannan

5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் ஜடேஜாவின் அபாரமான பந்துவீச்சால் வெஸ்ட் இண்டீஸ் அணி 104 ரன்னில் ஆட்டமிழந்தது. 

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் இப்போது விளையாடி வருகிறது. முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி சமனில் முடிந்தது. 3-வது போட்டியில் 43 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. மும்பையில் நடந்த 4-வது ஒருநாள் போட்டியில், இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து இந்தத் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 

இந்நிலையில், இந்திய அணி தொடரை வெல்லுமா அல்லது வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று டிரா செய்யுமா என்பதை தீர்மானிக்கும் கடைசி போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்று வருகின்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தடுமாறினார். அந்த அணி 2 ரன் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்களை  இழந்தது. பவெல்(16), சாமுவேல்ஸ்(24), ஹோல்டர்(25) தவிர மற்றவர்கள் ஒற்றையிலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். ஹோப் டக் அவுட் ஆனார். 

வெஸ்ட் இண்டீஸ் அணி 104 ரன்னில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அபாரமாக பந்துவீசிய ஜடேஜா 4 விக்கெட்களை சாய்த்தார். அஹமத், பும்ரா தலா இரண்டு விக்கெட்களை எடுத்தனர். இந்தியாவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அடித்துள்ள குறைவான ஸ்கோர் இது. இதனையடுத்து, 105 ரன் என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது. ஷிகர் தவான் 6 ரன்னில் ஆட்டமிழந்தார்.