இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இருந்து வேறு மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகள் மோதிய முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்றது. இதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் இன்று தொடங்கியது.
இதனிடையே, இரு அணிகளுக்கு இடையே அக்டோபர் 29 ஆம் தேதி நடைபெறவிருந்த நான்காவது ஒருநாள் போட்டியின் மைதானம் மாற்றப்பட்டுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவிருந்த போட்டி, அதே மும்பையில் உள்ள இந்திய கிரிக்கெட் கிளப் மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி அமைக்கப்பட்ட குழு இந்த முடிவினை எடுத்துள்ளது.
முன்னதாக, இரண்டாவது ஒருநாள் போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்திலிருந்து விசாகப்பட்டினத்திற்கு மாற்றப்பட்டது. மத்திய பிரதேச கிரிக்கெட் அமைப்பிற்கும் பிசிசிஐக்கும் இடையிலான மோதல் காரணமாக இந்த போட்டி மாற்றம் செய்யப்பட்டது.