விளையாட்டு

ஷாக் கொடுத்தது வெஸ்ட் இண்டீஸ், சரிந்தது இந்தியா!

ஷாக் கொடுத்தது வெஸ்ட் இண்டீஸ், சரிந்தது இந்தியா!

webteam

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் நேற்று நடந்தது. இந்திய அணியில் யுவராஜ்சிங், அஸ்வின், புவனேஷ்வர் குமார் ஆகியோருக்குப் பதிலாக, தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து 4-வது முறையாக டாஸ் ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜாசன் ஹோல்டர், பேட்டிங்கை தேர்வு செய்தார். விக்கெட்டை தக்க வைப்பதிலேயே அந்த அணி வீரர்கள் கவனம் செலுத்தியதால், ரன் வேகம் ஆமை வேகத்திலேயே இருந்தது. இதனால் அந்த அணியால், 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 189 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் எவின் லீவிஸ், கைல் ஹோப் தலா 35 ரன்கள் எடுத்தனர். ஷாய் ஹோப் 25, சேஸ் 24 ரன்கள் எடுத்தனர்.

இந்திய தரப்பில் உமேஷ் யாதவ், ஹர்திக் பாண்ட்யா தலா 3 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். 

அடுத்து 190 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய அணி ஆடியது. ரஹானே நின்று ஆடினாலும் என்ன அவசரமோ தவான், கேப்டன் கோலி, தினேஷ் கார்த்திக் ஆகியோர் தலா, 5, 3, 2 ரன்களில் அவுட் ஆகி பெவிலியன் திரும்ப அணியில் பரபரப்புத் தொற்றிக்கொண்டது. அடுத்து வந்த கூல் கேப்டன் தோனி, நின்று பொறுமையாக ஆடினார். அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றுவிடுவார் என்று நினைத்துக்கொண்டிருக்கையில், 48.5-வது ஓவரில் வில்லியம்ஸ் பந்துவீச்சில் கேட்ச் ஆனார். அதோடு இந்திய அணியின் நம்பிக்கையும் தோற்றுப் போனது. தோனி 54 ரன்கள் எடுத்தார். அவர் அவுட்டாகும் போது, இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 176 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்தடுத்த பந்துகளில் உமேஷ் யாதவும் முகமது ஷமியும் அவுட் ஆக, இந்திய அணி 178 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. வெஸ்ட் இண்டீஸின் கேப்டன் ஹோல்டர் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அவருக்கு ஆட்டநாயகன் விருதும் கிடைத்தது.