மகளிர் இருபது ஓவர் உலகக்கோப்பையில், இலங்கைக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை ஷஃபாலி வர்மா. இவர் நடைபெற்று வரும் மகளிர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் முக்கிய தூணாக விளங்கி வருகிறார். 16 வயதே நிரம்பிய இந்த ஹரியானா புயல், சச்சின் டெண்டுல்கரை தனது முன்மாதிரி எனக் கூறுகிறார். ஆனால் ஷஃபாலி வெளிப்படுத்தும் ஆட்டத்திறனோ அதிரடி மன்னன் சேவாக்கின் பாணி. இந்திய அணி விளையாடி முடித்துள்ள நடப்பு உலகக்கோப்பை தொடரின் மூன்று போட்டிகளிலும் இவரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. தற்போது, நான்காவது லீக் போட்டியில் இவர் தன்னுடைய அதிரடியால் மிரட்டியுள்ளார்.
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா, இலங்கை அணிகள் மோதிய லீக் ஆட்டம் மெல்பர்ன் நகரில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களம் கண்ட அந்த அணி, இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
20 ஓவர்களில் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் சேர்த்தது. இலங்கை அணி தரப்பில் அதிகப்பட்சமாக சமாரி அத்தப்பட்டு, 24 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். இந்திய சுழற்பந்து வீச்சாளர் ராதா யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
பின்னர் விளையாடிய இந்திய அணிக்கு இளம் வீராங்கனை ஷபாலி வர்மா அதிரடி தொடக்கம் அமைத்து கொடுத்தார். அவர், 34 பந்துகளில் 47 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், ரன் அவுட் ஆனார். பின்னர் ஜேமிமா ரோட்ரிகஸ் மற்றும் தீப்தி சர்மா ஆகியோர் சிறப்பாக விளையாடியதால், இந்திய அணி 14.4 ஓவர்களில் வெற்றி இலக்கை கடந்தது. இந்திய சுழற்பந்து வீச்சாளர் ராதா யாதவ் ஆட்டநாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய அணி தொடக்க சுற்றில் களம் கண்ட 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தியிருக்கிறது.
இன்றையப் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ஷஃபாலி வர்மா மற்றும் பூனம் யாதவை இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் பாராட்டியுள்ளார். இதுகுறித்து தன்னுடைய ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.