விளையாட்டு

செஞ்சுரியை தவறவிட்ட ரிஷப் பந்த் - முதல் நாளில் இந்திய அணி குவித்த ரன்கள் எவ்வளவு?

செஞ்சுரியை தவறவிட்ட ரிஷப் பந்த் - முதல் நாளில் இந்திய அணி குவித்த ரன்கள் எவ்வளவு?

சங்கீதா

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் முடிவில், இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், 0-3 என்ற கணக்கில் தொடரை இழந்து ஒயிட்வாஷ் ஆகியுள்ளது. இதையடுத்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. அதன்படி, இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று தொடங்கியது.

விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியப் பிறகு, ரோகித் சர்மா மூன்று வடிவிலான போட்டிக்கும், இந்திய அணியின் முழுநேர கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் இந்தியா சந்திக்கும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும். மேலும் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் 100-வது டெஸ்ட் போட்டி என்பதாலும் பலத்த எதிர்பார்ப்பு நிலவியது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், மயங்க் அகர்வாலும் களமிறங்கினர். ரோகித் 29 ரன்களில் லகிரு குமாரா பந்துவீச்சில் ஆவுட்டானார். அடுத்ததாக 33 ரன்கள் எடுத்திருந்த மயங்க் அகர்வால் எல்.பி.டபிள்யூ முறையில் வெளியேறினார். முதல் நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி, 26 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்களை சேர்த்திருந்தது.

ஹனுமா விகாரியும் (30), விராட் கோலியும் (15) களத்தில் இருந்தனர். இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 100-வது போட்டியில், சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 45 ரன்களுடன் விராட் கோலி ஆட்டமிழந்ததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். அதன்பின்பு ரிஷப் பந்துடன் கைகோர்த்து ஆடிய ஹனுமா விஹாரி, 58 ரன்கள் எடுத்தநிலையில், பெர்ணான்டோ பந்து வீச்சில் அவுட்டானார்.

இந்திய அணி தேநீர் இடைவேளை வரை 53 ஓவரில், 4 விக்கெட் இழப்புக்கு 199 ரன்களை எடுத்திருந்தது. ஸ்ரேயாஸ் 14 ரன்களுடனும், ரிஷப் பந்த் 12 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இடைவேளைக்குப்பிறகு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர் - ரிஷப் பந்த் கூட்டணி 50 ரன்களுக்கு தாக்குப் பிடித்தது. இதன்பின் 27 ரன்கள் எடுத்திருந்த ஸ்ரேயாஸ், டி சில்வா பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் வெளியேறினார்.

தொடர்ந்து ரிஷப் பந்துடன், ரவீந்திர ஜடேஜா கைகோர்த்து விளையாடினர். இந்த ஜோடி அதிரடி ஆட்டத்துடன், நிதானமாக விளையாடியது. இதனால் ரன்கள் மளமளவென ஏறியது. அரை சதம் கடந்து, செஞ்சுரி அடிப்பார் என்று எதிர்பார்த்தநிலையில், ரிஷப் பந்த் 97 பந்துகளில் 96 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் எடுத்துள்ளது. ஜடேஜா 45 ரன்களுடனும், அஸ்வின் 10 ரன்களுடன் களத்தில் உள்ளனர். நாளை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகும் 2-ம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 400 ரன்களை நோக்கி நகருமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.