கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே லக்னோ மற்றும் கொல்கத்தாவில் நடைபெறவிருந்த ஒருநாள் போட்டிகள் ரத்து செய்யப்படுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இமாச்சலப் பிரதேச மாநிலம் தர்மசாலா மைதானத்தில் நேற்று நடைபெறவிருந்த இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இந்நிலையில், வரும் 15-ஆம் தேதி லக்னோவில் நடைபெறும் 2-ஆவது ஒரு நாள் போட்டியும், அதைத்தொடர்ந்து 18-ஆம் தேதி நடைபெறும் மூன்றாவது ஒரு நாள் போட்டியும் ரசிகர்கள் இல்லாமல் நடத்தப்படும் என பிசிசிஐ அறிவித்திருந்தது.
கொரோனா பரவுவதை தடுக்க பொதுமக்கள் பெருமளவில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்ற அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதால், பிசிசிஐ இந்த முடிவை எடுத்தாக நேற்று அறிவித்தது. இந்நிலையில் லக்னோவில் நடைபெற இருந்த 2ஆவது ஒருநாள் போட்டியும், கொல்கத்தாவில் நடைபெறவிருந்த 3 ஆவது ஒருநாள் போட்டியும் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
முன்னதாக மார்ச் 29 ஆம் தேதி தொடங்கவிருந்த ஐபிஎல் 2020 தொடரும் கொரோனா அச்சம் காரணமாக ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.