விளையாட்டு

இந்திய அணி படுதோல்வி - தொடர் வெற்றிக்கு முற்றுப் புள்ளி வைத்தது நியூசிலாந்து

இந்திய அணி படுதோல்வி - தொடர் வெற்றிக்கு முற்றுப் புள்ளி வைத்தது நியூசிலாந்து

rajakannan

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி எளிதாக வென்றது.

வெலிங்டனில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 165 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. அடுத்து களம்கண்ட நியூசிலாந்து அணி 348 ரன்கள் எடுத்தது. 183 ரன்கள் பின்தங்கிய நிலையில் களம் கண்ட இந்திய 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் முக்கிய 4 விக்கெட்களை இழந்து 1‌4‌‌‌4 ரன்கள் எடுத்திருந்தது.

இதனையடுத்து 4ஆம் நாள் ஆட்டத்தை ரஹானே, விஹாரி இணை தொடங்கியது. இன்றைய ஆட்டத்தின் போல்ட் வீசிய 3ஆவது ஓவரில், களத்தில் நின்று நம்பிக்கை அளித்துக்கொண்டிருந்த ரஹானே 29 ரன்னில் ஆட்டமிழந்தார். இதைத்தொடர்ந்து விஹாரி 15 ரன்னிலும், அஸ்வின் 4 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இந்திய ‌அணி 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 9 ரன் எடுத்தால் வெற்றி ‌என எளிதான இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 2 ஆவது ஓவரிலேயே வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இப்போட்டியில் 9 விக்கெட்களை கைப்பற்றிய நியூசிலாந்து அணியின் டிம் சவுதி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் தொடர்ந்து 7 போட்டிகளில் வெற்றிபெற்று வீறுநடைபோட்டு வந்த இந்திய அணி இப்போட்டியில் தோல்வி கண்டுள்ளது.