விளையாட்டு

முதல் பந்திலே ரிவிவ்யூ இழந்த இந்தியா - குப்திலை 1 ரன்னில் வெளியேற்றிய பும்ரா

முதல் பந்திலே ரிவிவ்யூ இழந்த இந்தியா - குப்திலை 1 ரன்னில் வெளியேற்றிய பும்ரா

rajakannan

இந்தியாவுக்கு எதிரான முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி தனது முதல் விக்கெட்டை இழந்துள்ளது. 

இந்தியா - நியூசிலாந்து இடையிலான இந்தப் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இந்திய அணியில் குல்தீப் யாதவிற்கு பதிலாக சாஹல் களமிறங்கியுள்ளார். 

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில் குப்தில், நிக்கோலஸ் தொடக்கவீரர்களாக களமிறங்கினர். இந்திய அணியில் முதல் ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். குப்தில் அந்தப் பந்தினை எதிர்கொண்டார். அந்தப் பந்தே அவரது பேடில் பட இந்திய அணி சார்பில் எல்.பி.டபிள்யூ கேட்கப்பட்டது. எல்லோரும் உரக்க கத்தி விக்கெட் கேட்டனர். ஆனால், நடுவர் விக்கெட் கொடுக்கவில்லை. அதனால், விராட் கோலி, தோனி, ரோகித் சர்மா உள்ளிட்டோர் கலந்து பேசி ரிவிவ்யூ கேட்டனர். ரிப்ளேவில் பந்து பேட்டில் படாமல் சென்றது தெளிவாக தெரிந்தது. ஆனால், ஸ்டம்பினை குறிபார்த்து அடிக்கவில்லை. அதனால், விக்கெட் இல்லாததோடு இந்திய அணியின் ரிவிவ்யூ முதல் பந்திலே பறிபோனது. 

இதனையடுத்து, முதல் ஓவரை ரன் ஏதுமில்லாமல் புவனேஸ்வர் குமார் மெயிடனாக வீசினார். அடுத்த ஓவரையும் பும்ரா அற்புதமாக வீசி மெயிடன் ஆக்கினார். மூன்றாவது ஓவரில் புவனேஸ்வர்குமார் ஒரு ரன் மட்டும் கொடுத்தார். 

பும்ரா வீசிய நான்காவது ஓவரில் குப்தில் விக்கெட்டை சாய்த்தார். விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து குப்தில் ஒரு ரன்னில் வெளியேறினார். நியூசிலாந்து அணி 9 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 23 ரன்கள் எடுத்துள்ளது.