விளையாட்டு

‘ரோகித் இல்லை.. தவான் இல்லை.. மிடில் ஆர்டரில் கே.எல்.ராகுல்’ - கோலி எடுக்கும் ‘ரிஸ்க்’

‘ரோகித் இல்லை.. தவான் இல்லை.. மிடில் ஆர்டரில் கே.எல்.ராகுல்’ - கோலி எடுக்கும் ‘ரிஸ்க்’

webteam

நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரராக பிரித்வி ஷா விளையாடுவார் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து - இந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 5-ம் தேதி ஹாமில்டனில் தொடங்குகிறது. 2-வது போட்டி ஆக்லாந்தில் 8-ம் தேதியும், 3-வது போட்டி மவுண்ட் மவுங்கானுயில் 11-ம் தேதியும் நடைபெற உள்ளது. அதன்பின் முதல் டெஸ்ட் வெலிங்டனில் 21ம் தேதியும், 2-வது டெஸ்ட் கிறிஸ்ட்சர்ச்சில் 29ம் தேதியும் நடைபெற உள்ளன.

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தசைப்பிடிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த ரோகித் முழுமையாக குணமடையாததால் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த சில வருடங்களாக இந்திய ஒருநாள் அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, ஷிகர் தவன், கே.எல்.ராகுல் ஆகியோர் மட்டுமே களமிறங்கி வந்தனர். இந்நிலையில், நியூசிலாந்து மண்ணில் இரு புதிய தொடக்க வீரர்களுடன் களமிறங்குகிறது இந்திய அணி.

இதுகுறித்து இந்திய கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களிடம் கூறுகையில், “ரோஹித் உடல்நிலை குறித்து அனைவருக்கும் தெரியும். அவர் ஒருநாள் போட்டியில் விளையாடாதது துரதிருஷ்டவசமானது. இனி எந்த ஒருநாள் போட்டியும் இல்லாததால் அவர் குணமடைவது சிறந்தது. பிரித்வி ஷா தொடக்க வீரராக விளையாடுவார். கே.எல். ராகுல் நடுவரிசையில் விளையாடுவார். அந்த நிலையில் அவர் தொடர்ந்து நன்கு விளையாட வேண்டும் என விரும்புகிறோம்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் தோல்வியடைந்தோம். ஆனால் 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றினோம். அந்தத் தொடரிலிருந்து நாங்கள் நிறைய நம்பிக்கையை எடுத்துக்கொள்வோம். நேர்மறை கிரிக்கெட்டை விளையாட முயற்சிப்போம். எங்களின் திட்டம் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. நியூசிலாந்து அணியும் அவ்வளவு எளிதாக விட்டுக் கொடுக்காது. கடந்த டி20 தொடரில் இரு அணிகளுக்குமே பீல்டிங் சரியாக அமையவில்லை. டி20 போட்டியில் பதற்றம் இருப்பது சகஜம்தான். ஆனால் ஒருநாள் போட்டியில் பீல்டிங் சொதப்பினால் ஆட்டத்தை மாற்றிவிடும்” எனத் தெரிவித்தார்.

ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் இல்லாத தருணத்தில் பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் ஆகிய இளம் வீரர்களுடன் போட்டியை தொடங்குவது சரியான முடிவாக இருக்குமா என்பது சந்தேகமே. சர்வதேச போட்டிகளை பொறுத்தவரை பிரித்வி ஷா இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் ஷாவுக்கு இதுதான் அறிமுகப் போட்டி.

அனுபவம் வாய்ந்த கே.எல்.ராகுல் இருக்கும் போது அவரையே தொடக்க வீரராக களமிறக்குவது சரியானதாக இருக்கும். தற்போது அவர் நல்ல பாஃர்மில் இருக்கிறார். தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை எல்லா நிலைகளிலும் வெளிப்படுத்தி வருகிறார். இருப்பினும், கே.எல்.ராகுலை நடுக்களத்தில் இறக்கிவிட்டு புதுமுக வீரர்களை தொடக்க வீரர்களாக இறக்கி விராட் கோலி ரிஸ்க் எடுக்கிறார் என்பதே பெரும்பாலானோரின் வருத்தமாக உள்ளது.