விளையாட்டு

சமியின் டெத் ஓவர் ‘ஷாக்’ .. ஹிட்மேனின் சிக்ஸர்கள் - வீணான வில்லியம்சன் அதிரடி

சமியின் டெத் ஓவர் ‘ஷாக்’ .. ஹிட்மேனின் சிக்ஸர்கள் - வீணான வில்லியம்சன் அதிரடி

rajakannan

ஹாமில்டனில் நடைபெற்ற மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் ஹாமில்டன் நகரில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டி மிகவும் சுவாரஸ்யமாக நடந்து முடிந்துள்ளது. போட்டி இப்படி த்ரிலாக முடியும் என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். ஏனெனில் போட்டியின் போக்கு கடைசி நிமிடம் வரை நியூசிலாந்து அணிக்கு சாதகமாகவே சென்று கொண்டிருந்தது. அந்த ஆட்டத்தின் போக்கை கடைசி கட்டத்தில் மாற்றியவர் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி முதற்கட்டமாக நடைபெற்று வரும் டி20 தொடரில் அசத்தலாக விளையாடி வெற்றிகளை பதிவு செய்து வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற நம்பிக்கையுடனும், தொடரை கைப்பற்றும் முனைப்புடனும் ஹாமில்டனில் இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் களமிறங்கியது இந்திய அணி.

இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ்வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய, இந்திய அணி பேட்டிங் செய்தது. முதல் இரண்டு போட்டிகளில் சொதப்பிய ரோகித் சர்மா இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசினார். ஆனால், மற்ற இந்திய வீரர்கள் யாரும் சிறப்பாக விளையாடவில்லை. ரோகித் சர்மா 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், அடுத்ததாக கேப்டன் விராட் கோலி மட்டும் 27 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

ரோகித் சர்மா அதிரடி காரணமாக முதல் 10 ஓவர்களில் இந்திய அணி 92 ரன்கள் குவித்தது. அதனால், நிச்சயம் இந்திய அணி 200 ரன்களை குவிக்கும் என எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், வழக்கம் போல் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பவே, இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து, 180 ரன்கள் என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது.

விக்கெட்கள் ஒருபுறம் தொடர்ச்சியாக வீழ்ந்தாலும், தனி ஒருவனாக கேப்டன் வில்லியம்சன் இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்தார். நியூசிலாந்து அணி எளிதில் வெற்றி பெற்றுவிடும் என்றே கருதப்பட்டது. ஏனென்றால், வில்லியம்சன் சிக்ஸர்களாக பறக்கவிட்டார். அவரது அதிரடியால் இறுதி ஓவரில் 9 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. களத்தில் 95 ரன்களுடன் வில்லியம்சன். கூடவே அதிரடி ஆட்டக்காரர் டெய்லர் இருந்தார். கடைசி ஓவரை சமி வீசினார். ஏற்கனவே இறுதி ஓவரில் பல அற்புதங்களை நிகழ்த்தியவர் என்பதால் சமி மீது ஒரு நம்பிக்கை இருக்கவே செய்தது.

ஆனால், முதல் பந்திலே இமாலய சிக்ஸர் விளாசி இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார் டெய்லர். அந்த இமாலய சிக்ஸரால், அடுத்த 5 பந்துகளுக்கு வெறும் மூன்று ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை ஏற்பட்டது. இரண்டாவது பந்தில் ஒரு ரன் அடிக்கப்பட்டது. அடுத்த நான்கு பந்துகளில் வெறும் இரண்டு ரன்களே தேவை. இந்த பந்தில்தான் திருப்புமுனை ஏற்பட்டது. 95 ரன்கள் எடுத்திருந்த வில்லியம்சன் சமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்திய ரசிகர்கள் சற்றே உற்சாகம் அடைந்தனர்.

அடுத்து களமிறங்கிய டிம் செஃபெர்ட், தான் சந்தித்த முதல் பந்தில் ரன் எதுவும் எடுக்கவில்லை, ஐந்தாவது பந்தில் பைஸ் மூலம் ஒரு ரன் எடுக்கப்பட்டது. இதனால், ஆட்டம் டை ஆனது. கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலை. ரசிகர்களை சீட் நுனிக்கே கொண்டு வந்தது அந்த கடைசி பந்து. இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த படியே, சமி தன்னுடைய நேர்த்தியான பந்துவீச்சில் டெய்லரை போல்ட் ஆக்கி நியூசிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்தார். சமியின் சிறப்பான பந்துவீச்சால் ஆட்டம் சமனில் முடிந்து, சூப்பர் ஓவருக்கு சென்றது.

சூப்பர் ஓவரில் முதலில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது. வில்லியம்சன், குப்தில் களமிறங்கினர். இந்திய அணி சார்பில் பும்ரா பந்து வீசினார். வில்லியம்சன் ஒரு சிக்ஸர், பவுண்டரியும், குப்தில் ஒரு பவுண்டரியும் விளாச, நியூசிலாந்து அணி 17 ரன்கள் எடுத்தது. ஒரு ஓவரில் 18 ரன்கள் என்பது சற்றே கடின இலக்குதான். 18 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இந்திய அணிக்காக ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் களமிறங்கினர். நியூசிலாந்து சார்பில் சவுத்தி பந்து வீசினார். 

முதல் இரண்டு பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்து கொஞ்சம் டென்ஷன் ஆக்கினார் ரோகித். கே.எல்.ராகுல் மூன்றாவது பந்தில் ஒரு பவுண்டரி அடித்தாலும் அடுத்த பந்தில் ஒரு ரன்மட்டுமே எடுத்தார். இதனால், முதல் நான்கு பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட, கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. களத்தில் ரோகித் சர்மா இருந்தார். போட்டி மிகவும் பரபரப்பான நிலைக்கு சென்றது.

கடைசி இரண்டு பந்துகளில் ரோகித் சர்மா சிக்ஸர் விளாச, இந்திய அணி அசத்தலாக வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றது. கிட்டதட்ட நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுவிட்டது என்ற நிலைக்கு சென்ற போட்டியை இந்திய அணிக்கு சாதகமாக திருப்பிய பெருமை சமி, ரோகித் சர்மாவையே சேரும். இந்தப் போட்டி இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்துவிட்டது என்பதில் சந்தேகமேயில்லை. ரோகித் சர்மாவுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம், நியூசிலாந்து மண்ணில் முதல் டி20 தொடரை வென்றுள்ளது இந்திய அணி. நியூசிலாந்து மண்ணில் முதல் முறையாக தொடர்ச்சியாக மூன்று டி20 போட்டிகளை வெற்றி பெற்றது இந்தியா. அத்துடன் இந்திய கேப்டனில் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற மைல்கல்லை விராட் கோலி எட்டியுள்ளார். அதேபோல், ரோகித் சர்மா தொடக்க வீரரான சர்வதேச போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார்.