விளையாட்டு

இந்தியாவை தோற்கடித்த 'Bazball effect' - இங்கிலாந்து வென்றது எப்படி?

இந்தியாவை தோற்கடித்த 'Bazball effect' - இங்கிலாந்து வென்றது எப்படி?

webteam

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 5 வது டெஸ்ட் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. கடைசி நாள் வரை சென்ற இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது.

ரூட் மற்றும் பேர்ஸ்ட்டோவின் அதிரடி ஆட்டத்தால் 378 ரன்களை இங்கிலாந்து அணி சுலபமாக சேஸ் செய்து முடித்திருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து அணி செய்திருக்கும் மிகப்பெரிய வெற்றிகரமான சேஸிங் இதுதான். இன்னொருபுறம் இந்திய அணி இந்த தொடரை வெல்லும் பொன்னான வாய்ப்பை தவறவிட்டிருக்கிறது.

முதல் 4 போட்டிகளின் முடிவில் 2-1 என இந்திய அணி முன்னிலையில் இருந்தது. இந்த கடைசிப் போட்டியை டிரா செய்தாலே இந்திய அணி இந்த தொடரை வென்றுவிடும் என்ற சூழலே இருந்தது. ஆனால், இந்திய அணியால் அதை செய்ய முடியவில்லை. தோல்வியை தழுவியிருக்கின்றனர். இதன்மூலம் அந்த பட்டோடி கோப்பையை இங்கிலாந்து அணியுடன் பகிர்ந்துக்கொள்ளும் வாய்ப்பு மட்டுமே இந்தியாவிற்கு கிடைத்திருக்கிறது.

இந்தப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது 'Bazball' எனும் சொல் அதிகமாக பேசப்பட்டிருந்தது. கமெண்டேட்டர்கள் தொடங்கி ரசிகர்கள் வரை அத்தனை பேரும் இங்கிலாந்து அணியின் அணுகுமுறையை 'Bazball' அணுகுமுறை என்று குறிப்பிட்டு விவாதித்துக் கொண்டிருந்தனர். இப்போது கூட இந்திய அணி இங்கிலாந்தின் இந்த 'Bazball' அணுகுமுறையிடமே வீழ்ந்திருப்பதாகவும் கருதப்படுகிறது. இந்தியாவை வீழ்த்திய அந்த மாயமான 'Bad Ball' என்றால் என்ன? இந்தியா எப்படி அதன் முன் சறுக்கியது?

முதல் இன்னிங்ஸில் 132 ரன்கள் முன்னிலையை பெற்றிருந்த இந்திய அணி இரண்டாம் இன்னிங்ஸில் மேற்கொண்டு 245 ரன்களை சேர்த்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணிக்கு டார்கெட் 378 ரன்கள். இந்த டார்கெட்டை எட்ட ஏறக்குறைய 5 செஷன்கள் இங்கிலாந்தின் கையில் இருந்தது. டெஸ்ட் போட்டிகளில் நான்காவது இன்னிங்ஸில் சேஸ் செய்யும் அணிக்கு 300 ரன்கள் என்பதே மிகப்பெரிய டார்கெட்தான். 300 ரன்களுக்கும் மேலான டார்கெட் எனில், சந்தேகமே இல்லாமல் பந்துவீசும் அணிக்கு சாதகமாகவே ஆட்டம் இருக்கிறதென கூறிவிடலாம். இங்கிலாந்தை பொறுத்தவரைக்குமே கூட நூறாண்டு கடந்த கிரிக்கெட் வரலாற்றில் அவர்கள் இவ்வளவு பெரிய ஸ்கோரை எப்போதுமே சேஸ் செய்ததில்லை.

இப்படியான சூழலில் 378 ரன்களை இங்கிலாந்துக்கு இந்தியா டார்கெட்டாக செட் செய்த அந்த நொடியிலேயே ஆட்டம் இந்தியா பக்கம் வந்துவிட்டதாகவே கருதப்பட்டது. ஆனால், எதிர்பாராதது நிகழ்ந்தது. ஏறக்குறைய சேஸிற்கு 5 செஷன்கள் கையில் இருந்த நிலையில் இரண்டரை செஷன்களிலேயே இங்கிலாந்து அணி வெற்றியை எட்டியிருக்கிறது. 76.4 ஓவர்களிலேயே இங்கிலாந்து அணி 378 ரன்களை எட்டியிருக்கிறது. டெஸ்ட் போட்டி போன்று அல்லாமல் ஒரு ஓடிஐ போட்டி போன்றே இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ஆடியிருந்தனர். அதிலும், குறிப்பாக ரூட்டும் பேர்ஸ்ட்டோவும் விக்கெட் விடாமல் அதேநேரத்தில் அதிரடியாகவும் ஆடி 269 ரன்களுக்கு கூட்டணி அமைத்து கடைசி வரை வீழாமலும் இருந்தனர்.

நான்காம் நாளான நேற்று கடைசி செஷனில் 34 ஓவர்களை இந்திய பௌலர்கள் வீசியிருந்தனர். இந்த 34 ஓவர்களில் மட்டும் இங்கிலாந்து அணி 152 ரன்களை எடுத்திருந்தது. ரன்ரேட் 4.4. பெய்ல்ஸ் ஓய்வை எட்டுவதற்கு முன் இறுதியாக வீசப்பட்ட 7 ஓவர்களில் மட்டும் ரூட்டும் பேர்ஸ்ட்டோவும் 42 ரன்களை எடுத்திருந்தனர். ரன்ரேட் 6.

பொதுவாக நாளின் கடைசி அரைமணி நேரத்திலெல்லாம் விக்கெட் விடாமல் அப்படியே நின்று ஆட்டத்தை அடுத்த நாளுக்கு உயிர்ப்போடு கொண்டு செல்வதையே சேஸிங் செய்யும் அணி விரும்பும். இங்கே இங்கிலாந்து அப்படியே தலைகீழாக செய்தது. கடைசி பந்து வரை அட்டாக்தான். நாள் முடிவதற்கான நேரம் எட்ட எட்ட வேகம் கூடியதே தவிர குறையவே இல்லை.

கடைசி நாளான நேற்று இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 119 ரன்கள் தேவைப்பட்டிருந்தது. கையில் 7 விக்கெட்டுகள் இருந்தது. பதுங்கி பாய்வதை பற்றியெல்லாம் யோசிக்கவே இல்லை. இன்றைக்கும் அதே அட்டாக்கிங் மனநிலைதான். தேவைப்பட்ட 119 ரன்களை 19.4 ஓவர்களிலேயே எட்டிவிட்டனர். ஏறக்குறைய ஓவருக்கு 6 ரன்களுக்கு மேல் எடுத்திருக்கின்றனர். பேர்ஸ்ட்டோவும் ரூட்டும் சதத்தையும் கடந்திருந்தனர்.

எதைப்பற்றியும் யோசிக்காமல் குதிரைக்கு கடிவாளம் கட்டியதைபோல வெற்றி என்ற ஒற்றை இலக்கை மட்டுமே மனதில் வைத்துக் கொண்டு நேர்மறையாக துணிச்சலாக இறங்கி ஆட வேண்டும். இதனால் தோல்வி ஏற்பட்டாலும் பரவாயில்லை. இதுதான் இங்கிலாந்து அணியில் புதிதாக ஊடுருவியிருக்கும் 'Bazball' மனநிலை. இந்த புதிய அணுகுமுறையை இங்கிலாந்துக்கு பழக்கப்பழக்கப்படுத்திக் கொண்டிருப்பவர் அந்த அணியின் புதிய பயிற்சியாளரான பிரண்டன் மெக்கல்லம்.

இன்னும் அப்படியே நினைவிருக்கிறது. இதே தொடரில் கடந்த ஆண்டில் லார்ட்ஸில் நடந்த போட்டியில் இங்கிலாந்து தடுமாறிப் போயிருந்தது. இந்தியா வரலாற்று வெற்றியை பெற்றிருந்தது. அந்த லார்ட்ஸ் போட்டியில் இங்கிலாந்துக்கு 270 க்கு அருகாமையிலான டார்கெட்தான். 60 ஓவர்கள் மட்டுமே மீதமிருந்தது. துணிச்சலாக தைரியமாக இறங்கி அடித்து ஓடிஐ போல ஆடி வெற்றிக்கு முயலலாம் அல்லது பதுங்கி பதுங்கி ட்ரா செய்துவிடலாம். இங்கிலாந்து அன்றைக்கு இருந்த நிலைமைக்கு இரண்டாவது ஆப்சனை டிக் அடித்தது. சேஸூக்கு செல்வதை விட 60 ஓவர்களை கடத்துவது இங்கிலாந்து அணிக்கு சரியான தேர்வாகப்பட்டது.

வெறும் இரண்டு செஷன்கள்தானே? ஆனால், அந்த இரண்டு செஷன்களுக்கு கூட இங்கிலாந்து அணியால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. 52 ஓவர்களில் 120 ரன்களுக்கு ஆல் அவுட். லார்ட்ஸில் இங்கிலாந்து அடைந்த இந்த தோல்விதான் நிகழ்காலத்தில் இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் மிக மோசமான பாதாளத்தை தொட்டுவிட்டதற்கான சாட்சியாக இருந்தது.

லார்ட்ஸ் போட்டி மட்டும் இப்போது நடந்திருந்தால், இங்கிலாந்து அணி ட்ராவுக்கான அந்த இரண்டாவது ஆப்சனை ஒரு போதும் தேர்வு செய்திருக்காது. முதல் ஆப்சனை டிக் அடித்திருப்பார்கள். மூர்க்கமாக மோதியிருப்பார்கள். முடிவெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. ஒரு போர் புரிந்த திருப்தியோடு முழுமையாக போராடி தோற்றிருந்தாலும் திருப்தியாக தோற்றிருப்பார்கள். ஏனெனில், பயிற்சியாளர் மெக்கல்லமின் பாணி அதுதான்!

அட்டாக்கிங் மனநிலையின் மூலம் நியுசிலாந்து அணியை ஒரு புதிய உச்சத்துக்கு கொண்டு சென்ற அதே மெக்கல்லம்தான் இப்போது அதே அட்டாக்கிங் மனநிலையோடு இங்கிலாந்தை பெரும் வீழ்ச்சியிலிருந்து மீட்டுக் கொண்டிருக்கிறார்.

ஒன்றிரண்டு வாரங்களுக்கு முன்பு நடந்த நியுசிலாந்துக்கு எதிரான தொடரிலிருந்துதான் இங்கிலாந்து அணிக்காக மெக்கல்லம் தனது பணியை தொடங்கினார். இந்தியாவிற்கு எதிரான இந்த போட்டியோடு சேர்த்து நான்கு போட்டிகளைத்தான் முழுமையாக முடித்திருக்கிறார். ஆனால், இந்த குறுகிய காலக்கட்டத்திலேயே இங்கிலாந்து அணி முழுமையாக வேறொரு அணியாக மாறி நிற்கிறது.

மெக்கல்லமின் வருகைக்கு முன்பு, கடைசியாக இங்கிலாந்து ஆடியிருந்த 23 இன்னிங்ஸ்களில் இரண்டு இன்னிங்ஸ்களில் மட்டுமே ஓவருக்கு 4 ரன்களுக்கு மேல் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ஸ்கோர் செய்திருந்தனர். மெக்கல்லமின் வருகைக்கு பின்பு இந்த இந்தியாவிற்கு எதிரான போட்டியோடு சேர்த்து 8 இன்னிங்ஸ்களில் 6 இன்னிங்ஸ்களில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ஓவருக்கு 4 ரன்களுக்கு மேல் அடித்திருக்கின்றனர். இதில், 3 இன்னிங்ஸ்களில் ஓவருக்கு 5 ரன்களுக்கு மேல் அடித்திருக்கின்றனர்.

பேட்டிங்கில் மட்டுமில்லை. பௌலிங்கிலும் இங்கிலாந்தின் தாக்குதல் இன்னும் மூர்க்கமாகியிருக்கிறது. மெக்கல்லமின் வருகைக்கு முன்பு கடைசி 16 போட்டிகளில் மூன்றே மூன்று முறை மட்டும்தான் இங்கிலாந்து பௌலர்கள் எதிரணியின் 20 விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர். மெக்கல்லமின் வருகைக்குப் பிறகு ஆடியிருக்கும் 4 போட்டிகளிலும் எதிரணியின் 20 விக்கெட்டுகளையும் இங்கிலாந்து பௌலர்கள் வீழ்த்தியிருக்கின்றனர். எண்களின் வழி 'Bazball effect' ஐ உணர விரும்புபவர்களுக்கான புள்ளிவிவரங்கள் இது.

க்ரீஸூக்குள் வந்தவுடனேயே ரூட் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடுவார். லெக் சைடில் 5 ஃபீல்டர்களை வைத்து அணை கட்டினாலும் பேர்ஸ்ட்டோ அங்கேயே பவுண்டரி அடிப்பார். ஸ்ரேயாஸை வீழ்த்த ஷார்ட் பால்தான் தேவையெனில் சமரசமின்றி ஷார்ட் பாலாக வீசுவார்கள். விராட் கோலியை எட்ஜ் எடுக்க வேண்டுமெனில் 5 ஸ்லிப்களை வைத்து மூர்க்கமாக அட்டாக் செய்வார்கள். சுருக்கமாகச் சொன்னால் நிதானம், பொறுமை எனும் டெஸ்ட் கிரிக்கெட்டின் விதிகள் அனைத்தும் இங்கே மீறப்படும். வெல்வதற்கு என்ன தேவையோ அதை மட்டுமே செய்ய வேண்டும்.

இங்கிலாந்தின் இந்த மூர்க்கமான அணுகுமுறையை இந்திய அணி சரியாக மதிப்பிட தவறிவிட்டது. லிமிட்டெட் ஓவர் பாணியில் ஆடுபவர்களுக்கு எதிராக இந்திய அணி டெஸ்ட் பாணியிலேயே ஆடியது. முதல் இன்னிங்ஸில் 132 ரன்கள் முன்னிலை பெற்றவுடனேயே இந்திய அணி ஆட்டத்தை இலகுவாக எடுத்துக்கொள்ள தொடங்கிவிட்டது. முதல் இன்னிங்ஸில் 416 ரன்களையெடுத்த இந்திய அணி இரண்டாம் இன்னிங்ஸில் 245 ரன்களை மட்டுமே எடுத்தது. அதுதான் இந்திய அணியின் தோல்விக்கும் காரணமாக அமைந்தது. இரண்டாம் இன்னிங்ஸில் இந்திய அணி கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் இங்கிலாந்தின் வெற்றியை இன்னும் கொஞ்சம் தள்ளியாவது போட்டிருக்கலாம்.

'இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகளை வீழ்த்த எதிரணியின் பௌலர்கள் பெரிதாக பிரயத்தனப்படவே தேவையில்லை. நான்கு பந்துகளை டைட்டாக வீசி விட்டு ஐந்தாவது பந்தை கொஞ்சம் தள்ளி வீசினால் பெரிய ஷாட்டுக்கு முயன்று விக்கெட்டை விட்டுவிடுவார்கள். பேட்ஸ்மேன்கள் எல்லா பந்துகளையும் அடிக்க முற்படுவதை பார்க்கையில் ஏமாற்றமாக இருக்கிறது. ஆனால், இதில் ஆச்சர்யமே இல்லை. இப்போதெல்லாம் அவர்களுக்கு அதுமட்டும்தான் கற்பிக்கவும்படுகிறது' கடந்த ஆண்டு இந்தியாவிற்கு எதிராக இங்கிலாந்து மரண அடி வாங்கிக் கொண்டிருக்கையில் இங்கிலாந்தின் ஜாம்பவானான ஜெஃப்ரி பாய்காட் இவ்வாறாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருப்பார்.

அதாவது, வெறுமென அட்டாக்கிங் கிரிக்கெட் மட்டுமே ஆடி டெஸ்ட் போட்டிகளை வெல்ல முடியாது என்பதே ஜெஃப்ரி பாய்காட்டின் கூற்று. மெக்கல்லம் மாதிரியான ஒரு பயிற்சியாளரும் ஸ்டோக்ஸ் மாதிரியான ஒரு கேப்டனும் நம்பிக்கையூட்டினால் அட்டாக்கிங்காக ஆடி மட்டுமே கூட வெல்ல முடியும் என்பதை இங்கிலாந்து இப்போது நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

-உ.ஸ்ரீராம்