இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், இந்திய அணி போராடி தோல்வியடைந்தது. இந்நிலையில் 2 வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. தொடர்ந்து மழை பெய்து வந்ததால், டாஸ் போடப்படாமல் முதல் நாள் போட்டி ரத்து செய்யப்பட்டது.
இங்கிலாந்து அணி, டாஸ் வென்று முதலில் பந்துவீசியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில், 107 ரன்களுக்கு சுருண்டது. லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணியின் குறைந்த ஸ்கோர் இது. இங்கிலாந்து அணியின் ஆண்டர்சன் 5 விக்கெட்டையும் வோக்ஸ் 2 விக்கெட்டையும் வீழ்த்தினர். பிராட், சாம் குர்ரன் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
இதனையடுத்து, இங்கிலாந்து அணி பேட்டிங்கை தொடங்கியது. குக்(21), ஜென்னிங்ஸ்(11), ரூட்(19), போப்(28), பட்லர் (24) என சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க பேர்ஸ்டோவ், வோக்ஸ் ஜோடி மட்டும் நிலைத்து நின்று ஆடியதோடு, ரன்களை குவித்தது. பேர்ஸ்டோவ் 93 ரன்னில் பாண்ட்யா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். வோக்ஸ் அபார சதமடித்தார். இது அவருக்கு முதலாவது டெஸ்ட் சதம்.
இங்கிலாந்து அணி 81 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 357 ரன்கள் எடுத்திருந்த போது, போதிய வெளிச்சம் இல்லாததால் மூன்றாம் நாள் போட்டி முடிவுக்கு வந்தது. வோக்ஸ் 120 ரன்களுடனும் சாம் குர்ரன் 22 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில், நான்காம் நாளான இன்று வோக்ஸ் மற்றும் குர்ரன் ஆட்டத்தை தொடர்ந்தனர். இங்கிலாந்து அணி 369 ரன் எடுத்திருந்த போது குர்ரன் 40 ரன்னில் ஆட்டமிழந்தார். மேற்கொண்டு 39 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து அணி டிக்ளர் செய்தது. வோக்ஸ் 137(177) ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். முகமது சமி, பாண்ட்யா தலா 3 விக்கெட்களை சாய்த்தனர்.
இதனையடுத்து, இந்திய அணி 289 ரன்கள் பின் தங்கிய நிலையில் தனது ஆட்டத்தை விளையாடி வருகிறது. இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கவே இந்திய போராட வேண்டி இருக்கும். இந்திய அணி 400 ரன்களுக்கு மேல் அடித்து 5ம் நாள் ஆட்டத்தில் பாதி வரை விளையாடினால் தான் தோல்வியில் இருந்து தப்பிக்க முடியும். மீண்டும் அதேபோல், மளமளவென விக்கெட்கள் வீழ்ந்தால் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடையும்.