விளையாட்டு

பாண்ட்யா வேகத்தில் சரிந்தது இங்கிலாந்து - ‘161’க்கு ஆல் அவுட்

பாண்ட்யா வேகத்தில் சரிந்தது இங்கிலாந்து - ‘161’க்கு ஆல் அவுட்

rajakannan

நாட்டிங்ஹாமில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 161 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

முதலில் விளையாடிய இந்திய அணி 329 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. கேப்டன் விராட் கோலி 97, ரகானே 81 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து தரப்பில் வோக்ஸ், ஆண்டர்சன், பிராட் தலா 3 விக்கெட்கள் சாய்த்தனர். 
முதல் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 307 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி, இரண்டாம் நாளான இன்று மேற்கொண்டு 22 ரன்கள் சேர்ப்பதற்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 

இதனையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடங்க வீரர்களாக குக்ம் ஜென்னிங் களமிறங்கினர். இருவரும் விக்கெட் விளாமல் நிதானமாக ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி 9.4 ஓவர்களில் 50 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி 54 ரன்கள் எடுத்த நிலையில், குக் 29 ரன்னில் ஆட்டமிழந்தார். இஷாந்த் சர்மா வீசிய 12வது ஓவரின் கடைசி பந்தில் குக் ஆட்டமிழக்க, அடுத்து பும்ரா வீசிய ஓவரின் முதல் பந்தில் ஜென்னிங்ஸ் 20 ரன்னில் நடையை கட்டினார். அடுத்தடுத்த இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட் வீழ்ந்தது. இதனையடுத்து, சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்த வண்ணம் இருந்தன. 

ஒரு கட்டத்தில், ஹர்திக் பாண்ட்யாவின் பந்து வீச்சில் இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். 128 ரன்னிற்குள் இங்கிலாந்து அணி 9 விக்கெட்களை இழந்தது. ரூட், பெர்ஸ்டோவ் உள்ளிட்ட முக்கிய விக்கெட்களை பாண்ட்யா சாய்த்தார். இதனால், இங்கிலாந்து அணி 140 ரன்னிற்குள் ஆட்டமிழந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் பட்லர் ஒரு மிரட்டு மிரட்டினார். டி20 போட்டியைப் போல் சிக்ஸர்களும், பவுண்டரிகளும் விளாசினார். இதனால், இங்கிலாந்து அணியின் ரன் கிடுகிடுவென உயர்ந்தது. 

பட்லர் 32 பந்தில் 39 ரன்கள் எடுத்த நிலையில், பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழக்க இங்கிலாந்து 161 ரன்னிற்கு ஆல் அவுட் ஆனது. ஹர்திக் பாண்ட்யா 6 ஓவர்கள் வீசி 28 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்கள் சாய்த்தார். டெஸ்ட் போட்டியில் அவர் 5 விக்கெட்கள் சாய்ப்பது இதுவே முதல் முறை. இதனையடுத்து, 168 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது. 

தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல், ஷிகர் தவான் களமிறங்கினர். இருவரும் இங்கிலாந்து பந்துவீச்சை அடித்து ஆடினர். கே.எல்.ராகுல் பவுண்டரிகளாக விளாசினார். ஒருநாள் போட்டியைப் போல் விளையாடினார். இதனால், இந்திய அணி 10 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 56 ரன்கள் எடுத்தது.